பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் தொடர்பான விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பொய் உரைத்ததாக அக்கட்சியின் தலைமைச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான 48 வயது பிரித்தம் சிங் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கூடிய நாடாளுமன்றக் குழுவிடம் அவர் பொய் உரைத்ததாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
திரு சிங்கிற்கு எதிரான 16 நாள் வழக்கு விசாரணை அக்டோபர் 14ஆம் தேதியிலிருந்து நவம்பர் 13ஆம் தேதி வரை அரசு நீதிமன்றத்தில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்குத் துணை முதன்மை மாவட்ட நீதிபதி லியூக் டான் தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனின் ஊழல் வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதைப் போல திரு சிங்கின் வழக்கு விசாரணையும் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று திரு சிங்கின் வழக்கறிஞர் திரு ஆண்ட்ரே ஜுமபோய் ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று வாதிட்டார்.
வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று திரு சிங் சார்பாக அவர் உயர் நீதிமன்ற நீதிபதி ஹூ ஷியூ பெங்கிடம் கோரினார்.
62 வயது முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன், மொத்தம் 35 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
அவற்றில் இரண்டு $166,000க்கும் அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகள்.
தொடர்புடைய செய்திகள்
அரசு ஊழியராக இருந்து கொண்டு $237,000க்கும் அதிக பெறுமானமுள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டதாக ஈஸ்வரன் மீது 32 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு பதிவானது.
ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறிப்பிட்ட சில தனிபர்களுடன் தொடர்புடையவை என்றும் அதன் காரணமாக அந்த வழக்கு தொடர்பாக எடுக்கப்படும் முடிவு மற்றவர்களையும் பாதிக்கும் என்றும் அரசு வழக்கறிஞர்கள் முடிவெடுத்து வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியதைத் திரு ஜுமபோய் சுட்டினார்.
“அரசு வழக்கறிஞர்களின் அதே வாதம் எங்களுக்கும் பொருந்தும்,” என்று திரு ஜுமபோய் தெரிவித்தார்.
நாடாளுமன்றச் சட்டம் திரு சிங்கையும் தாண்டி மற்றா நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோருடனும் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.
எனவே, ஈஸ்வரனின் வழக்கைவிட திரு சிங்கின் வழக்கு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திரு ஜுமபோய் வாதிட்டார்.
இதுபோன்ற வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் இதை விசாரிக்கும் ஆற்றல் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆனால் தாம் அரசு நீதிமன்றத்தை எவ்வகையிலும் குறைத்து எடைப்போடவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
“இது மிகவும் வினோதமான, தனித்துவம் வாய்ந்த வழக்கு. இதை உயர் நீதிமன்றம் விசாரிப்பதுதான் முறையாகும்,” என்றார் திரு ஜுமபோய்.