பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், அரசாங்கத்தின் பில்லியன் கணக்கான டாலர் செலவினங்கள் குறித்து பொதுமக்களுக்கு முழுமையான விவரங்களை வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
பல ஆண்டுகளில் காணாத மிகப்பெரிய நிதி உபரி நிலவும் இந்த நேரத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 24) வரவுசெலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தைத் தொடங்கி வைத்து நாடாளுமன்றத்தில் பேசிய திரு சிங், கடந்த பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட நேரத்தையும் விமர்சித்தார். உலகளாவிய வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்த உடனேயே தேர்தல் அறிவிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு அமெரிக்கா அறிவித்த ‘விடுதலை நாள்’ வரி விதிப்புகளைக் குறிப்பிட்டு பேசிய திரு சிங், “டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பு வெளியான சில நாள்களிலேயே மக்கள் செயல் கட்சி அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கலைத்தது,” என்றார்.
“மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அந்த வரி விதிப்பு, நிச்சயமற்ற சூழலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்கள் செயல் கட்சிக்குச் சாதகமான சூழல் இருக்கும்போதே தேர்தலை நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதன் பிறகு குறிப்பிட்ட துறைகளுக்கான வரி விதிப்புகள் மற்றும் சிங்கப்பூரில் அவற்றின் உண்மையான தாக்கம் குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன,” என்று அவர் கூறினார்.
அப்போது நிலவிய ‘இருண்ட சூழலுக்கு’ நேர்மாறாக, மக்கள் செயல் கட்சி அரசாங்கம் பல ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரிய நிதி உபரியுடன் தனது புதிய பதவிக்காலத்தைத் தொடங்கியுள்ளதாகத் திரு சிங் குறிப்பிட்டார்.
2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் பொருள், சேவை வரி உயர்வு மூலம் திரட்ட உத்தேசிக்கப்பட்ட இரண்டு முதல் மூன்று பில்லியன் டாலர் கூடுதல் வருவாயை விட, தற்போதைய உபரி நிதி பல மடங்கு அதிகம் என்று அவர் கூறினார். சிங்கப்பூர் 2025 நிதி ஆண்டில் $15 பில்லியன் உபரியைப் பதிவு செய்துள்ளது. மேலும், 2026 நிதி ஆண்டில் $8 பில்லியன் உபரியை எதிர்பார்க்கிறது.
இந்தச் சூழலில், மூப்படையும் மக்கள் தொகை மற்றும் நீடிக்கும் சமத்துவமின்மை போன்ற சவால்களைச் சிங்கப்பூர் எதிர்கொண்டு வரும் வேளையில், இந்த உபரி நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் குறிப்பிடத்தக்க பொது நலன் அடங்கியுள்ளதாகத் திரு சிங் தெரிவித்தார்.

