பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்கின் நடத்தை குறித்து ஆராயும் ஒழுங்குமுறைக் குழுவில் செங்காங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஹவ்காங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இடம்பெற்றிருப்பர் என்று தெரியவந்துள்ளது.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவாட்டி ஹி டிங் ரு, இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு பிங் எங் ஹுவாட் ஆகியோரே அவர்கள் என்று நம்பப்படுகிறது. சிஎன்ஏ செய்தி ஊடகம் அந்தத் தகவலை வெளியிட்டது.
திரு சிங், நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யுரைத்த குற்றம் சென்ற ஆண்டு (2025) நிரூபிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரான அவரின் எதிர்காலத்தை ஒழுங்குமுறைக் குழு உறுப்பினர்கள் முடிவுசெய்வார்கள் என்று கருதப்படுகிறது.
பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததன் தொடர்பில் 2021ஆம் ஆண்டு, அக்கட்சி ஒழுங்குமுறைக் குழுவொன்றை அமைத்தது. தற்போதைய சர்ச்சையில் சிக்கியுள்ள மூத்த உறுப்பினர்களான திரு சிங், கட்சித் தலைவர் சில்வியா லிம், துணைத் தலைவர் ஃபைசல் மனாப் ஆகியோர் அதில் இடம்பெற்றிருந்தனர்.
திரு சிங் மீதான உயர்நீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகளைத் திருவாட்டி லிம்மும் திரு ஃபைசலும் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற தீர்மானத்தை நாடாளுமன்றம் சென்ற வாரம் ஏற்றுக்கொண்டது. அது பின்னர் தனியாகப் பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
திருவாட்டி ஹி, கட்சியின் பொருளாளராக இருக்கிறார். இணைப் பேராசிரியர் லிம், அதன் கொள்கை ஆய்வின் துணைத் தலைவராகச் செயலாற்றுகிறார். திரு பிங், ஹவ்காங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2012ஆம் ஆண்டு முதல் 2020 வரை இருந்தார். 2022ல் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுவிலிருந்து அவர் வெளியேறினார்.
திரு பிங், குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பது வழக்கத்திற்கு மாறானது என்று கூறப்படுகிறது. பொதுவாக அத்தகைய குழுக்களில் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களே இடம்பெற்றிருப்பர் என்று முன்னாள், இந்நாள் கட்சித் தொண்டர்கள் கூறுகின்றனர்.
பாட்டாளிக் கட்சியின் அரசியலமைப்புச் சட்டதிட்டங்களைத் திரு சிங் மீறினாரா என்பதைக் கண்டறிய ஒழுங்குமுறைக் குழுவொன்று நிறுவப்படும் என்று கட்சி இம்மாதத் (2026 ஜனவரி) தொடக்கத்தில் கூறியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
பிரதமர் லாரன்ஸ் வோங், சென்ற வாரம், திரு சிங்கை எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து அகற்றினார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பில் நீடிக்கத் திரு சிங் தகுதியற்றவர் என்று மன்றம் வாக்களித்த மறுநாள் பிரதமரின் முடிவு வந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அந்தப் பொறுப்பிற்கு முன்மொழியுமாறு அக்கட்சிக்குத் திரு வோங் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவாட்டி ஹி, இணைப் பேராசிரியர் லிம் உட்பட பாட்டாளிக் கட்சியின் 11 உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
ஒழுங்குமுறைக் குழுவின் முடிவுக்காகக் கட்சி காத்திருக்கும் என்றும் அதன் பின்னரே அடுத்த நடவடிக்கைகளை அது எடுக்கும் என்றும் அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

