சிங்கப்பூரின் நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவர் பிரித்தம் சிங், இன்று அரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆளானபோது தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரான திரு சிங், 2021ஆம் ஆண்டு நவம்பரில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய்யுரைத்ததாகக் கூறப்படும் இரண்டு குற்றச்சாட்டுகளை மாவட்ட நீதிபதி லியூக் டான் முன்னிலையில் மறுத்தார்.
பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் பொய்யுரைத்த சர்ச்சையின் தொடர்பில் அந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
முதல் குற்றச்சாட்டு, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 10 தேதி திரு சிங் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய்யுரைத்ததாகக் குறிப்பிடுகிறது.
திருவாட்டி ரயிஸா கான், திருவாட்டி சில்வியா லிம், திரு ஃபைசல் மனாப் ஆகியோருடனான சந்திப்புக்குப் பிறகு திருவாட்டி கான் தான் பொய்யுரைத்ததை நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ள விரும்பியதாகத் திரு சிங் கூறியிருந்தார். இது பொய் என்பதை முதல் குற்றச்சாட்டு குறிப்பிடுகிறது.
நாடாளுமன்றத்தில் தான் பொய் சொன்னதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு அதுகுறித்துத் தெளிவுபடுத்தும்படி திருவாட்டி ரயீசா கானிடம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியும் டிசம்பர் 15ஆம் தேதியும் தாம் கூறியதாகத் திரு சிங் குறிப்பிட்டிருந்தார். இதுவும் பொய் என்று இரண்டாவது குற்றச்சாட்டு குறிப்பிடுகிறது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் திரு சிங், அதிகபட்சமாக 7,000 வெள்ளி அபராதத்தையும் மூன்றாண்டுச் சிறைத்தண்டனையையும் எதிர்நோக்குகிறார்.
பாலியல் வன்முறைக்கு ஆளான ஒருவருடன் காவல் நிலையத்திற்குத் தான் சென்றதாகவும் அங்கு அவர் நல்ல முறையில் நடத்தப்பட்டவில்லை என்றும் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ரயீசா கான் கூறினார். அது குறித்து 2021 டிசம்பரில் நாடாளுமன்ற சிறப்புரிமைக்குழு விசாரணை நடத்தியது
தொடர்புடைய செய்திகள்
இது உண்மை அன்று எனப் பிறகு தெரியவந்தது. தான் பொய்யுரைத்ததை ஒப்புக்கொண்ட திருவாட்டி ரயீசா கான், பாட்டாளிக்கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.
நாடாளுமன்றச் சிறப்புரிமையைத் திருவாட்டி கான் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
செங்காங் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி கானுக்கு 35,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படவேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது.
திரு சிங் மீதும் பாட்டாளிக் கட்சித் துணைத் தலைவர் ஃபைசல் மனாப் மீதும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் சாத்தியம் தொடர்பில் அரசுத் தரப்பின் பார்வைக்கு அனுப்பவும் அந்தக் குழு பரிந்துரைத்தது.
சிங், தமது வாக்குமூலத்தில் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை என்று அந்தக் குழு குறிப்பிட்டது.
விவகாரத்துடன் தொடர்புடைய கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது திரு ஃபைசல் பதிலளிக்க மறுத்ததாகவும் அது சொன்னது.
நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய்யுரைத்ததாக 2024ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி திரு சிங் மீது காவல்துறை குற்றம் சாட்டியது.
திரு ஃபைசல் மீது குற்றம் சாட்டப்படவில்லை. ஆயினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளும்படி காவல்துறை அவருக்கு எழுத்துபூர்வ அறிவுரையை வழங்கியது.