தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இங் சீ மெங் மறுத்தாலும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் பிரித்தம் சிங்

2 mins read
552a4447-6ab2-4e9c-b9ab-a9878348972b
பொதுத் தேர்தலில் தோல்வியுறும் மசெக வேட்பாளர்கள் தஞ்சம் புகுமிடம் என்டியுசி என்று தாம் சொன்னதில் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) பிரதிநிதிகளாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழிலாளர்களின் நலன்களை தீவிரமாகப் பிரதிநிதிப்பதோடு கொள்கை விவாதங்களில் பங்களிப்பர் என்று ஜாலான் காயு தனித்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளர் இங் சீ மெங் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.

தேர்தலில் தோல்வியுறும் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் தஞ்சம் புகுமிடம் என்டியுசி என்று பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் சொன்னதில் எந்த உண்மையும் இல்லை என்று திரு இங் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அவரது மறுப்பு குறித்து விவாதிக்கப்போவதில்லை என்று திங்கட்கிழமை (ஏப்ரல் 28) பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

என்டியுசி பிரதிநிதிகளாக இருக்கும் மசெக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று திரு சிங் முன்னதாகக் கூறியிருந்தார்.

கடந்த ஐந்தாண்டுகளாக திரு இங் என்டியுசியை வழிநடத்தியுள்ளார் என்று சுட்டிக்காட்டிய திரு சிங், “அவர் நாடாளுமன்றத்தில் இல்லாததால் தொழிலாளர்கள் எவரும் தங்கள் வாக்குரிமையை இழந்துவிடவில்லை,” என்றும் குறிப்பிட்டார்.

திரு இங்கின் மறுப்புடன் தனக்கு உடன்பாடில்லை என்றும் தெரிவித்தார் திரு சிங்.

“மசெக வேட்பாளர்கள் தஞ்சம் புகுமிடம் என்டியுசி என்று நான் சொன்னதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என்றார் அவர்.

பாட்டாளிக் கட்சி போட்டியிடும் குழுத்தொகுதிகளுக்கு ஐந்தாண்டுத் திட்டம் இல்லை என்றும் எனவே ஜாலான் காயு தொகுதிக்கும் எந்தத் திட்டமும் இல்லை என்று பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் குறிப்பிட்டதாகவும் திரு இங் கூறியிருந்தார்.

இந்நிலையில், “ஒருவர் உண்மையிலேயே பதவியில் இருந்து, தொகுதியின் அமைப்பு, மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டால் மட்டுமே நம்பகமான, சாத்தியமான ஐந்தாண்டுத் திட்டங்களை முன்வைக்க முடியும்,” என்று திருவாட்டி லிம் தெரிவித்துள்ளார்.

போட்டியிடும் கட்சிகள் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை வழங்குவது அரத்தமற்றது என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்