பொய் விவகாரத்தின் விளைவுகளை பிரித்தம் சிங் எதிர்பார்க்கவில்லை: லோ பெய் யிங்

பொய் விவகாரத்தின் விளைவுகளை பிரித்தம் சிங் எதிர்பார்க்கவில்லை: லோ பெய் யிங்

3 mins read
5f2687af-8acb-4ea2-8491-123faf452d09
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானின் உதவியாளர் திருவாட்டி லோ பெய் யிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் பொய்யுரைத்ததற்கான விளைவின் கடுமையை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் எதிர்பார்க்கவில்லை.

அத்துடன், திருவாட்டி கான் கூறியது பொய் என்று 2021 அக்டோபரில் தெரிந்துகொண்ட பிரித்தம் சிங், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் தாமாகவே அப்பொய்யைத் தெளிவுபடுத்த முன்வந்திருக்கவேண்டும் என்று திருவாட்டி கானின் முன்னாள் உதவியாளரும் முன்னாள் கட்சி உறுப்பினருமான லோ பெய் யிங் தெரிவித்துள்ளார்.

சிங் பொய்யுரைத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்காக வியாழக்கிழமை (அக்டோபர் 17) நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது திருவாட்டி கான், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விசாரிக்கப்பட்ட பின்னர் திருவாட்டி லோ சாட்சிக்கூண்டில் ஏறினார்.

திருவாட்டி கானின் பொய்யைப் பற்றி அறிந்த முதல் சில நபர்களில் திருவாட்டி லோவும் ஒருவர்.

பாட்டாளிக் கட்சிக்காக 10 ஆண்டுகாலம் சேவையாற்றிய திருவாட்டி லோ, 2022ல் பதவி விலகினார்.

‘காண்டினெண்டலிஸ்ட்’ (Kontinentalist) தரவு ஆய்வு நிறுவனத்தின் இணை நிறுவனரும் அதன் தலைவருமாக திருவாட்டி லோ உள்ளார்.

2021 ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கும் அக்டோபர் 4ஆம் தேதிக்கும் இடையே, திருவாட்டி கான் பொய்யுரைத்ததைத் தெளிவுபடுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் திருவாட்டி லோ.

அதன் பின்னர், 2021 அக்டோபரில் தாமும் திரு யுதிஷ்த்ரா நாதனும் சிங்கிடம் பேசப்போவதாக திருவாட்டி லோ முடிவெடுத்திருந்தார்.

திருவாட்டி கான் பொய் கூறியதை தனிப்பட்ட அறிக்கை ஒன்றின் மூலம் எவ்வாறு ஒப்புக்கொள்ளவேண்டும் என அக்டோபர் 12ஆம் தேதி நடந்த ஒரு சந்திப்பின்போது அவர்கள் விவாதித்ததாக திருவாட்டி லோ நீதிமன்றத்தில் கூறினார்.

திருவாட்டி கானுக்கு நேர்ந்த பாலியல் வதை அனுபவங்களை அவர் பகிரவேண்டுமா என்பது குறித்த விவாதமும் அப்போது தங்களிடையே நிலவியதாகத் திருவாட்டி லோ நினைவுகூர்ந்தார்.

அந்தப் பொய் நாடாளுமன்றத்தில் ஏன் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேட்டதற்கு, “அமைச்சர் சண்முகம் இந்த விவகாரத்தை விட்டுவிடப்போவதில்லை என்பது ஒரு காரணம். வலுவான இன்னொரு காரணம், திருவாட்டி கானின் மனசாட்சிக்கும் கட்சிக்கும் தொடர்புடையதே,” என திருவாட்டி லோ பதிலளித்தார்.

2021 நவம்பர் 10ஆம் தேதி சிங்கிற்கு திருவாட்டி லோ அனுப்பிய குறுஞ்செய்தியில், எச்சரிக்கை இருந்துபோதும் பின்விளைவுகளை கட்சி எதிர்பார்க்கவில்லை என்றும் பொதுமக்களின் கோபத்தைத் தணிக்க கட்சி முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் கூறியதை அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டினார்.

இதற்குப் பதிலளித்த திருவாட்டி லோ, தாம் சிங்குடனும் மற்ற கட்சித் தலைவர்களுடனும் நடந்த பல்வேறு சந்திப்புகளைக் குறிப்பட்டார்.

அக்டோபர் 12ஆம் தேதி சந்திப்பின்போது சிங் பதற்றமேதுமின்றி இருந்ததாகவும் திருவாட்டி லோ கூறினார்.

“திருவாட்டி கான் தமது மன்னிப்பையும் அறிக்கையையும் வாசித்தபோது சிங் பதற்றமேதுமின்றி காணப்பட்டார். இந்த விவகாரம் ஓய்ந்துவிடும் என்றும் சிங் கருதியிருந்தார். விளைவுகளின் கடுமையை அவர் சரியாகக் கருதவில்லை என எண்ணுகிறேன்,” என்றார் திருவாட்டி லோ.

திருவாட்டி கானை விசாரிக்க நவம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்ட கட்டொழுங்குக் குழு, காட்சிப்படைப்புபோல் இருந்ததை உணர்ந்ததாக திருவாட்டி லோ கூறினார்.

‘ரகசியத்தைப் பாதுகாத்தது நெருடலாக இருந்தது’

பின்னர், தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமாபோயின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருவாட்டி லோ, தாமும் திருவாட்டி கானும் நண்பர்கள் என அழைக்கப்படுவதை ஒப்புக்கொள்வதாகக் கூறினார்.

2021 ஆகஸ்ட்டில் நடந்த ஸூம் அழைப்பின்போது தாம் பொய்யுரைத்ததாக திருவாட்டி கான் கூறியபோது, எப்படி உணர்ந்தீர் என திருவாட்டி லோவிடம் திரு ஜுமாபோய் கேட்டார்.

அதற்குப் பதிலாளித்த திருவாட்டி லோ, இந்த உண்மை தம் மனதை உறுத்தியதாகக் கூறினார். 

“பிற கட்சி உறுப்பினர்களிடமும் தொண்டூழியர்களிடமும் இதைக் கூற முடியாமல் ரகசியமாகக் கட்டிக்காத்தது நெருடலாக இருந்தது,” என்றார் திருவாட்டி லோ.

பொய்யை ரகசியமாக வைத்திருக்க திருவாட்டி கான் தம்மிடம் கேட்டிருந்தாரா என்று திரு ஜுமாபோய் கேட்டதற்கு, “இல்லை” என்று திருவாட்டி லோ பதிலளித்தார்.

பாலியல் வதைக்கு தாம் ஆளானதாக திருவாட்டி கான் கூறியதால், அவரை மதித்து இதனை ரகசியமாக வைத்திருந்தாக திருவாட்டி லோ கூறினார்.

பிறகு பொய்யைத் தமது ‘கல்லறைக்குள் எடுத்துச் செல்லும்படி’ தம்மிடம் கட்சித் தலைவர்கள் கூறியதாக திருவாட்டி கான் வாட்ஸ்அப் குழுவில் அனுப்பிய குஞ்செய்திப் பற்றி கேட்கப்பட்டதற்கு, அந்தக் குறுஞ்செய்தியை நவம்பர் 29ஆம் தேதிதான்  சரியாக உள்வாங்கியதாக திருவாட்டி லோ குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிடம் திருவாட்டி லோ சமர்ப்பித்த பத்திரங்களில், திரு யுதிஷ்த்ரா நாதன் அனுப்பிய குறுந்தகவல் நீக்கப்பட்ட காரணம் குறித்து பொய்யுரைத்ததையும் ஒப்புக்கொண்டார்.

திருவாட்டி லோவைத் தற்காப்பு தரப்பு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) விசாரிக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்