பாட்டாளிக் கட்சித் தலைவரான பிரித்தம் சிங்குக்கு நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம் பொய் சொன்னதற்காக மொத்தம் 14,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகாது. வருகின்ற பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடும் தகுதியை இழக்க மாட்டார் என்று தேர்தல் ஆணையம் பிப்ரவரி 17ஆம் தேதி உறுதிப்படுத்தியது.
ஒரே ஒரு குற்றத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்கு ஆணையம் விளக்கமளித்தது.
அதாவது, ஒருவர் மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டு, ஒவ்வொரு குற்றத்திற்கும் தகுதி இழக்கக்கூடிய அளவுக்கு ஒரு தவணைக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான சிறைத் தண்டனை அல்லது 10,000 வெள்ளிக்கும் குறைவான அபராதம் விதிக்கப்பட்டால் அவர் எம்.பி. பதவியை இழக்க மாட்டார் என்று ஆணையம் குறிப்பிட்டது.
குற்றங்களுக்கு தனித்தனியாக விதிக்கப்பட்ட தண்டனையை ஒன்றுசேர்த்து கணக்கிடக் கூடாது என்றும் அது மேலும் தெரிவித்தது.
நவம்பர் 2021ல் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயிஸா கான் பொய் சொன்னதாகக் கூறப்பட்ட விவகாரம் தொடர்பில் கூட்டப்பட்ட நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் உறுதிமொழியின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளில் திரு பிரித்தம் சிங் குற்றவாளி என மாவட்ட நீதிபதி தீர்ப்பளித்தார்.
திரு சிங்குக்கு அதிகபட்சமாக ஒவ்வொரு குற்றத்திற்கும் 7,000 வெள்ளி அபராதமும் மொத்தம் 14,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரான அவர், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
2022ஆம் ஆண்டுக்கு முன், சிங்கப்பூர் சட்டப்படி $2,000க்கு மேல் அபராதம் விதிக்கப்படுவோர், நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கக்கூடிய தகுதியை இழந்துவிடுவர். எனினும், 2022ல் நிறைவேறிய சட்டத் திருத்தத்துக்குப் பிறகு அத்தொகை $10,000 ஆக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

