எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர பிரித்தம் சிங் தகுதியற்றவர்: நாடாளுமன்றம்

2 mins read
daad70fb-3c67-4060-891c-07c3ccafa5a2
நாடாளுமன்றத்தில் இருந்த 11 பாட்டாளிக் கட்சி எம்.பி.க்களும் எழுந்து நின்று தீர்மானத்துக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டைப் பதிவுசெய்தனர். அந்த நேரத்தில் தொகுதியில்லா எம்.பி. அய்லீன் சோங் அங்கு இல்லை. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதற்காகத் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்கத் தகுதியற்றவர் என்ற கருத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

புதன்கிழமையன்று (ஜனவரி 14) மூன்று மணி நேர விவாதத்திற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அப்போதைய பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானின் பொய் தொடர்பில் திரு சிங்கின் நடத்தையும் அதற்கான அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், ஓர் எதிர்க்கட்சித் தலைவரிடம் எதிர்பார்க்கப்படும் தேவைகள் மற்றும் தரநிலைகளை அவர் பூர்த்தி செய்யவில்லை என்பதைக் குறிக்கும் ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

திரு சிங் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்வது நாடாளுமன்றத்தின் நிலைப்பாட்டையும், சிங்கப்பூரின் அரசியல் அமைப்பின் நம்பகத்தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும் என்று அவைத் தலைவர் இந்திராணி ராஜா எழுப்பிய தீர்மானத்தில் மேலும் கூறப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இருந்த 11 பாட்டாளிக் கட்சி எம்.பி.க்களும் எழுந்து நின்று தீர்மானத்துக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டைப் பதிவுசெய்தனர். அந்த நேரத்தில் தொகுதியில்லா எம்.பி. அய்லீன் சோங் அங்கு இல்லை. ஒன்பது நியமன எம்.பி.க்களும் மக்கள் செயல் கட்சி எம்.பி.க்களும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி பிரதமரால் வழங்கப்படுவதால், திரு சிங்கை அந்தப் பதவியில் தக்கவைத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்த முடிவு பிரதமர் லாரன்ஸ் வோங்கின் பொறுப்பாகும்.

விவாதத்தைத் தொடங்கிவைத்த குமாரி இந்திராணி, சலுகைகள் குழுவிடம் பொய் சொன்னது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளில் திரு சிங்கின் தண்டனையை உறுதிசெய்து 2025 டிசம்பர் 4ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் குறிப்பிட்டார்.

சுருக்கமாக, “திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் பொய் சொல்ல இரண்டு முறை திரு சிங் வழிகாட்டினார்; அவர் சலுகைகள் குழுமுன் இரண்டு முறை பொய் சொன்னார்; மேலும் அவர் நீதிமன்றத்திலும் பொய் சொன்னார். திரு சிங் பொதுமக்களிடமும் பொய் சொன்னார். மேலும் தனது சொந்தக் கட்சியினரிடமிருந்து முக்கியத் தகவல்களை மறைத்தார்,” என்று குமாரி இந்திராணி விளக்கினார்.

“மிக அதிகமான பொய்கள் வெளிப்படுத்தப்பட்டன. முந்தைய பொய்யை மறைக்க மேலும் பல பொய்கள் ஒன்றன்மேல் ஒன்றாகக் குவிக்கப்பட்டன. திரு சிங் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பதால் அது ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது,” என்று அவர் கூறினார்.

நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகளால் இந்த விவகாரம் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது என்று அவைத் தலைவர் மேலும் கூறினார்.

மூன்று நியமன எம்.பி.க்களான திருவாட்டி குவா பூன் தெங், திரு மார்க் லீ, திரு நியோ கோக் பெங் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்று, திரு சிங் தாமாக முன்வந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறக்கும்படி அழைப்பு விடுத்தனர்.

விவாதத்தை நிறைவுசெய்து பேசிய அமைச்சர் இந்திராணி, இந்தத் தீர்மானம் எந்தவொரு தனிமனிதருக்கும் அல்லது கட்சிக்கும் அப்பாற்பட்டது என்றும், நாடாளுமன்றத்தின் நேர்மை மற்றும் நிலைப்பாட்டையும், குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையின் தரத்தையும் நிலைநிறுத்துவதைப் பற்றியது என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்