மேல்முறையீடு நிராகரிப்பு; $14,000 அபராதம் செலுத்தினார் பிரித்தம் சிங்

2 mins read
994c501c-7069-435a-9c0b-0c92342a2c18
டிசம்பர் 4ஆம் தேதியன்று தமது மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறும் எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு பிரித்தம் சிங். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் பொய்யுரைத்த வழக்கில் எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங்கின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.

இது ஏமாற்றமளித்தாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தாம் மதித்து ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (டிசம்பர் 4) காலை நீதிபதி ஸ்டீவன் சோங், இரு குற்றச்சாட்டுகளிலும் திரு சிங்கைக் குற்றவாளியென நீதிபதிகள் தீர்ப்பளித்தற்குப் போதிய சான்றுகள் இருப்பதாகக் கூறி, அவரது மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதனையடுத்து, ஒவ்வொரு வழக்கிற்கும் $7,000 என்ற வகையில், திரு சிங் நீதிமன்றத்தில் $14,000 அபராதம் செலுத்தினார் .

சிங்கப்பூர் அரசியலமைப்பில் உச்ச நீதிமன்றம் ஓர் முக்கியத் தூண் எனக் குறிப்பிட்ட அவர், நீதிமன்றங்களின் சுதந்திரம், கண்டிப்பான தன்மை உள்ளிட்டவைமீது மிகுந்த மதிப்புவைத்துள்ளதாகவும் சொன்னார்.

தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திரு சிங், “ரயீசா கான் பொய்யுரைத்தது தொடர்பில் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க நீண்டகாலம் எடுத்துக்கொண்டது உண்மையே. அதற்கு முழுமையாகப் பொறுப்பேற்கிறேன்,” என்று விளக்கமளித்தார்

இந்நீண்ட பயணத்திற்கிடையே நாடாளுமன்றத்தில் தமது பொறுப்பை நேர்மையுடன் நிறைவேற்றியதாகவும் சிங்கப்பூரர்களுக்காகப் பணியாற்றுவதில் கொண்டுள்ள கடப்பாடு மாறாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“உங்களது ஆதரவு, எனது பணியின் முக்கியத்துவத்தையும், உங்களது நம்பிக்கையைச் சாதாரணமாகக் கருதக் கூடாது என்பதன் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது,” என்றார் திரு சிங்.

தமது பாட்டாளிக் கட்சியினருக்காகவும், அனைத்துச் சிங்கப்பூரர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பதில் தமக்கு உள்ள உறுதிப்பாடு ஒருபோதும் மாறாது என்றும் அவர் சொன்னார்.

தம்மீதும் தமது கட்சிமீதும் களங்கம் விளைவிக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக எழுந்த கருத்துக்கு பதிலளித்த அவர், “அரசியல் எதிர்க்கருத்துகள், வேறுபாடுகள் ஆகியவை, அமைப்பை ஊடுருவி, நீதிமன்றங்களின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் அளவிற்குச் செல்லாது,” என்றார்.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 10 மற்றும் 15ஆம் தேதிகளில் நாடாளுமன்ற சிறப்புக் குழுவிடம் பொய்யுரைத்ததாகத் திரு சிங் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. 13 நாள்கள் வழக்கு விசாரணைக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, அவருக்கு $14,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தண்டனைக்கு எதிராகத் தாம் மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் தெரிவித்திருந்தார்.

சிங்கின் மேல்முறையீட்டு மனு குறித்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்டீவன் சோங் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அவ்வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

குறிப்புச் சொற்கள்