பிரித்தம் சிங் விவகாரம்: ஒழுங்குமுறைக் குழு அமைக்கும் பாட்டாளிக் கட்சி

2 mins read
கட்சியின் அரசமைப்பை மீறினாரா என்பதை ஆராயும்
7492bf1b-69cb-4f0c-bcab-1159cebccfcc
2025 டிசம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசும் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங். - படம்: சாவ் பாவ்

பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் அரசமைப்பை மீறினாரா என்பதை ஆராய ஒழுங்குமுறைக் குழு ஒன்றைப் பாட்டாளிக் கட்சி அமைக்கவுள்ளது.

திரு சிங் அங்கம் வகிக்கும் கட்சியின் மத்திய செயற்குழு, இந்த ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க உத்தரவிட்டதாக சனிக்கிழமை (ஜனவரி 3) வெளியிட்ட அறிக்கையில் பாட்டாளிக் கட்சி தெரிவித்தது.

நாடாளுமன்றக் குழுவிடம் திரு சிங் பொய்யுரைத்த குற்றத்தை டிசம்பர் 4ஆம் தேதி உயர் நீதிமன்றத் தீர்ப்பு நிலைநிறுத்தியது. இதைத் தொடர்ந்து உருவெடுத்துள்ள விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்க ஒரு தினத்துக்கு முன்பு தனது மத்திய செயற்குழு கூடியதாகப் பாட்டாளிக் கட்சி சொன்னது.

சிறப்பு உள்வட்ட உறுப்பினர் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான அண்மைய கோரிக்கை குறித்தும் ஜனவரி 2ஆம் தேதி நடத்தப்பட்ட சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்தச் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கோரிக்கை வந்ததைக் கட்சித் தலைவர் சில்வியா லிம் ஒப்புக்கொண்டதாகவும் பாட்டாளிக் கட்சி டிசம்பர் 28ஆம் தேதி தெரிவித்திருந்தது.

சட்டத்தின் உரிய நடைமுறைக்கான தேவையைக் கருத்தில்கொண்டு, ஒழுங்குமுறைக் குழு அதன் பணியை நிறைவுசெய்த பிறகே இந்தச் சிறப்புக் கூட்டத்தை நடத்துவது பொருத்தமானது என மத்திய செயற்குழு முடிவு செய்ததாகக் கட்சி ஜனவரி 3ஆம் தேதி அறிக்கையில் குறிப்பிட்டது.

திரு சிங், திருவாட்டி லிம் போன்ற 12 எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். அல்ஜுனிட் குழுத்தொகுதி முன்னாள் எம்.பி.க்களான கட்சியின் துணைத் தலைவர் ஃபைசல் மனாப்பும் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங்கும் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

“தேவையில்லாத தாமதத்தைத் தவிர்க்க, ஒழுங்குச் செயல்முறையை மூன்று மாதங்களுக்குள் நிறைவுசெய்ய மத்திய செயற்குழு காலவரையறையை நிர்ணயித்துள்ளது.

“ஒழுங்குமுறைச் செயல்முறை நிறைவுபெற்ற இரண்டு வாரங்களுக்குள் சிறப்பு உள்வட்ட உறுப்பினர் கூட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்படும்,” என்று பாட்டாளிக் கட்சி தெரிவித்தது.

பிப்ரவரியில் சிறப்புக் கூட்டத்தை நடத்தக் கோரி 20க்கும் மேற்பட்ட உள்வட்ட கட்சி உறுப்பினர்கள் கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டு அதைச் சமர்ப்பித்ததைக் கட்சி வட்டாரங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் உறுதிப்படுத்தின.

திரு சிங்கின் குற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து ஜனவரியில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதை முன்னிட்டு மேற்கண்ட இந்த நிலவரம் உருவெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்