பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) காலை தமது கட்சியின் பிற எம்.பி.க்களுடனும் உறுப்பினர்களுடனும் சேர்ந்து கட்சியின் செய்திக்கடிதம் விற்பதைக் காணமுடிந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின்னர், அல்ஜுனிட் குழுத்தொகுதியில் அவர் காணப்பட்டார்.
கட்சியின் மற்றொரு தலைவரான சில்வியா லிம், முன்னாள் தலைவர் லாவ் தியா கியாங் ஆகியோர் உட்பட 40க்கும் மேற்பட்ட பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து திரு சிங் தொகுதி உலா சென்று ‘சுத்தியல்’ (Hammer) செய்திக்கடிதத்தை விற்றார்.
காலியாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது திரு சிங்கும் திருவாட்டி லிம்மும் பதில்கூற மறுத்துவிட்டனர்.
கேள்வியுடன் திரு சிங்கை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் அணுகியபோது, கட்சியின் ஊடகக் குழுவைத் தொடர்புகொள்ளுமாறு அவர் சொன்னார்.
ஊடகக்குழு, கட்சியின் ஆக அண்மைய அறிக்கையைப் பதிலாக எடுத்துக்கொள்ளுமாறு கூறியது.
திரு சிங்கை கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 15) சிங்கப்பூரின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் லான்ஸ் வோங் நீக்கினார். அந்தப் பதவிக்கு வேறொருவரைத் தேர்ந்து எடுக்குமாறு கேட்டு பாட்டாளிக் கட்சிக்குப் பிரதமர் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அந்தக் கடிதத்தை கவனமுடன் ஆராய்ந்து வருவதாக அன்றைய தினமே பாட்டாளிக் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது. அதுவே அக்கட்சியின் ஆக அண்மைய அறிக்கை.

