நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யுரைத்ததாக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த சர்ச்சையுடன் இது தொடர்புடையது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் திரு சிங் மறுத்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 14ஆம் தேதியன்று தொடங்குகிறது.
இந்நிலையில், காலை 9 மணி அளவில் திரு சிங் அரசு நீதிமன்றத்தை அடைந்தார்.
அவருடன் அவரது வழக்கறிஞரான திரு ஆண்ட்ரே ஜுமபோயும் இருந்தார்.
திரு ஜுமபோய், முன்னாள் அரசு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்துக்கு வந்திருந்த பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் திரு சிங் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
பாலியல் குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றைக் காவல்துறை ஒழுங்காகக் கையாளவில்லை என்று முன்னாள் செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரயீசா கான் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 25 வயதுப் பெண் ஒருவர் அதுகுறித்து புகார் செய்ய காவல்நிலையத்துக்குச் சென்றபோது தாமும் அவருடன் சென்றதாக ரயீசா கான் தெரிவித்திருந்தார்.
அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்திய அதிகாரி அவர் அணிந்திருந்த ஆடைகள் பற்றி முறையற்ற கருத்துகளைத் தெரிவித்ததாகவும் அவர் மதுபானம் அருந்தியிருந்ததைச் சுட்டிக்காட்டியதாகவும் ரயீசா கான் கூறினார்.
ஆனால், இதுகுறித்து தாம் பொய் சொன்னதாக அதே ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதியன்று ரயீசா கான் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டது.
ரயீசா கானின் நடத்தை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த விவகாரம் குறித்து சாட்சியம் அளிக்க திரு சிங் அழைக்கப்பட்டார்.
விசாரணையின்போது திரு சிங் பொய் சொன்னதாகக் கூறப்பட்டது.
48 வயது திரு சிங் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ரயீசா கான், பாட்டாளிக் கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.
அவருக்கு $35,000 அபராதம் விதிக்கப்பட்டது.