தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாட்டாளிக் கட்சிக்கான வாக்கு நாட்டை நலிவுபடுத்தாது: பிரித்தம் சிங்

2 mins read
0380e67b-113b-4d31-9338-730802b584be
சிங்கப்பூரர்கள் விவரம் தெரிந்தவர்கள், சிந்தனையாளர்கள், நல்ல வாக்காளர்கள் என்று தாம் நம்புவதாகத் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சி நல்ல சக்தியாகத் திகழ்வதாக அதன் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை (மே 1) நடைபெற்ற இரவு நேர பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சிங்கப்பூரர்கள் விவரம் தெரிந்தவர்கள், சிந்தனையாளர்கள், நல்ல வாக்காளர்கள் என்று தாம் நம்புவதாகச் சொன்னார்.

“உங்களுக்கு முன்னால் நீங்கள் காண்கிற இந்தப் பாட்டாளிக் கட்சியினரின் ஒட்டுமொத்த செயலாற்றலை நீங்கள் மதிப்பிடுங்கள். சமநிலையுடைய நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கு நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு, தெள்ளத் தெளிவாக உள்ளது,” என்று திரு சிங் கூறினார்.

ஆண்டர்சன்-சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற பாட்டாளிக் கட்சியின் இறுதி பிரசாரத்தைக் காண ஆதரவாளர்கள் திரளாகச் சென்றிருந்தனர்.

கட்சியின் சின்னமான சுத்தியல் வடிவிலான மஞ்சள் பலூன்களையும் கட்சிக் கொடிகளையும் ஏந்திய ஆதரவாளர்கள், வேட்பாளர்கள் உரையாற்றியபோது பல்வேறு தருணங்களில் ஆதரவு வரிகளை முழக்கமிட்டனர்.

கோட்டைமதில்கள்போல அந்த வளாகத்தைச் சுற்றியுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் நடைபாதை மாடங்களில் பலரும் நின்று கூட்டத்தைத் தூரத்திலிருந்து கண்டனர்.

தெரிந்த முகங்கள், புதுமுகங்கள் என அனைவர்க்கும் உற்சாகக் கைத்தட்டல் கொடுக்கப்பட்டது. பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங், இந்தத் தேர்தலில் முதன்முறையாகவும் கடைசி முறையாகவும் மேடையேறினார்.

மக்கள் செயல் கட்சி முன்வைத்த வாதங்களில் சிலவற்றை எதிர்த்துப் பேசுவதில் திரு சிங்கின் உரை குறியாக இருந்தது.

அதிக எதிர்க்கட்சி வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதால் மக்கள் செயல் கட்சி (மசெக) தலைமையிலான அரசாங்கம் நலிவடையுமா என்ற வாதம், மசெகவுக்கும் பாட்டாளிக் கட்சிக்கும் இடையே தேர்தல் பிரசாரக் காலகட்டத்திற்கான கடைசி சில நாள்களின்போது நிலவியது.

துணைப் பிரதமர் கான் கிம் யோங்கிற்கு மாறாக அவரது பதவியில் மற்றொருவர் செயல்பட்டால் சிங்கப்பூர் பாதிப்படையுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் நிற்கும் பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த 26 வேட்பாளர்களுமே வென்றாலும் 73 விழுக்காட்டு நாடாளுமன்ற இடங்களை மசெக தன்வசம் கொண்டிருக்கும் என்று திரு சிங் மீண்டும் கூறினார்.

வெளிநாட்டிலுள்ள எந்த ஜனநாயக அரசாங்கமும் இந்நிலையை நலிவாகக் கருதாது என்றும் அவர் கூறினார்.

மேலும், துணைப் பிரதமர் கானுக்குச் சரியான மாற்று நபர் இல்லை என்றால் அவரை பொங்கோல் குழுத்தொகுதிக்கு பிரதமர் வோங் நகர்த்தியிருக்கமாட்டார் என்றும் திரு சிங் வாதிட்டார்.

துணைப் பிரதமர் கானுக்கு இணையான மாற்று இல்லை என்றால், அவர் மீண்டும் நாடாளுமன்றம் புகாவிட்டால் சிங்கப்பூர் பாதிப்படையும் என்றால், அவரைப் பிரதமர் வோங் பொங்கோலுக்கு நகர்த்தியது விளையாட்டுத்தனமான, பொறுப்பற்ற முடிவு என்றும் திரு சிங் சாடினார்.

குறிப்புச் சொற்கள்