நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் பொய்யுரைத்ததாகக் குறிப்பிடும் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிரித்தம் சிங்கிற்கு $14,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் சிங்கிற்குத் தலா $7,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திங்கட்கிழமை (பிப்ரவரி 17) பிற்பகல் 3.30 மணியளவில் தண்டனையை அறிவித்த நீதிபதி லியூக் டான், திருவாட்டி ரயீசா கானுக்கு தீங்கு விளைவிக்கப்படவில்லை என்பதைக் கருத்தில்கொண்டு, இந்த வழக்கில் சிறைத்தண்டனை பொருத்தமாகாது என வாதிட்ட அரசுத் தரப்பினருடனும் தற்காப்புத் தரப்பினருடனும் ஒத்துப்போவதாகக் கூறினார்.
இதனை அடுத்து, தண்டனைக்கு எதிராக தாம் மேல்முறையீடு செய்யப்போவதாக சிங், இணையத்தில் அறிக்கை வெளியிட்டார்.
தமது அரசியல் அந்தஸ்தைக் கட்டிக்காக சிங், நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவினரிடம் பொய்யுரைத்ததாகவும் அதற்காக திருவாட்டி கானையும் நெடுநாள் கட்சித் தொண்டர்களையும் இரையாக்கியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வோங் வூன் குவோங், தண்டனை விதிக்கப்பட்டதற்கு முன்னர் கூறினார். இதனால் திருவாட்டி கான், மேலும் கடுமையான தண்டனைக்கு ஆளாகியிருக்கலாம் எனக் கூறினார்.
இது கடுமையானது என்றும் மாண்புக்கு இழுக்கானது என்றும் அரசுத் தரப்பு சாடியது. நீதிமன்றத்தில் தம் பொய்யை மறுபடியும் கூறிய சிங்கிடம் வருத்தம் தென்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அவருக்குப் பிறகு பேசிய சிங்கின் தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமாபோய், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் $4,000க்குமேல் அபராதம் விதிப்பதற்குத் தேவையில்லை என்றார். திருவாட்டி கானின் பொய்யிலிருந்துதான் இந்த வழக்கு ஆரம்பித்தது என்றார் அவர்.
திருவாட்டி கானை சிங் பொய்யுரைக்கச் சொன்னார் என்பது அரசுத் தரப்பின் வாதமல்ல; மாறாக அவர் சொன்ன பொய்யைத் தெளிவுபடுத்த சிங் கோரவில்லை என்பது அவர்களது வாதம் என்று அவர் கூறினார்.