சிங்கப்பூரின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரித்தம் சிங்கை பிரதமர் லாரன்ஸ் வோங் நீக்கியுள்ளார். அந்தப் பதவிக்கு வேறொரு எம்.பி.யைத் தேர்ந்து எடுக்குமாறு பாட்டாளிக் கட்சியிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“திரு சிங்கிற்கு விதிக்கப்பட்ட குற்றவியல் தண்டனையையும் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று நாடாளுமன்றம் முடிவு செய்திருப்பதையும் நன்கு ஆராய்ந்த பின்னர் அவர் அந்தப் பதவியில் தொடருவது பொருத்தமாக இருக்காது என்று முடிவுசெய்துள்ளேன்,” என்று திரு வோங் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரித்தம் சிங்கை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க பிரதமர் எடுத்திருக்கும் முடிவு உடனடியாக நடப்புக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் மாண்பையும் நாடாளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் நேர்மையையும் நிலைநிறுத்த தமது முடிவு அவசியமானது என்று திரு வோங் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் முடிவு நடப்புக்கு வருவதால், திரு சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் இனி இருக்காது. குறிப்பாக, நாடாளுமன்ற விவாதங்களின்போது முதலில் பதிலளிக்கும் உரிமையை அவர் இழக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்ற அதிகமாக நேரம் வழங்கப்பட்டது. இனி அது வழங்கப்படாது.
அத்துடன் தேர்ந்து எடுக்கப்பட்ட ஓர் எம்பிக்கு வழங்கப்படும் ஊதியத்தில் இருமடங்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்படும். அதுவும் அவருக்கு இனி குறைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
நாடாளுமன்றக் குழுவிடம் பொய் சொன்னதற்காகத் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்க பிரித்தம் சிங் தகுதியற்றவர் என்று புதன்கிழமை (ஜனவரி 14) எழுப்பப்பட்ட தீர்மானத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
அந்தத் தீர்மானத்தை மசெகவின் அவைத் தலைவர் இந்திராணி ராஜா கொண்டு வந்தார்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மூன்று மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
2021ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அப்போதைய பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானின் பொய் தொடர்பில் திரு சிங்கின் நடத்தை, அதற்காக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ஓர் எதிர்க்கட்சித் தலைவரிடம் எதிர்பார்க்கப்படும் தேவைகள் மற்றும் தரநிலைகளை அவர் பூர்த்தி செய்யாதது போன்றவை தீர்மானத்தில் அடங்கி இருந்தன.
நாடாளுமன்றத்தில் இருந்த 11 பாட்டாளிக் கட்சி எம்.பி.க்களும் எழுந்து நின்று தீர்மானத்துக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டைப் பதிவுசெய்தனர்.
ஒன்பது நியமன எம்.பி.க்களும் மக்கள் செயல் கட்சி எம்.பி.க்களும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் புதிதாகத் தேர்ந்து எடுக்கப்படுபவர் திருவாட்டி கானின் வழக்கு தொடர்பாக சிறப்புரிமைக் குழு கண்டறிந்தவற்றில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடாது என்று பிரதமர் வோங் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், நாடாளுமன்றம் எதிர்பார்க்கும் உயர்ந்த தரநிலைகளை அவர் கொண்டிருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் முக்கியமான அந்தப் பதவி நீண்ட நாள்களுக்குக் காலியாக இருக்கக்கூடாது என்பதால் புதியவரின் தேர்ந்தெடுப்பு விரைவில் நிகழும் என கருதுகிறேன்,” என்று பிரதமர் வோங் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

