நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் பொய்யுரைத்ததாகக் குறிப்பிடும் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங்கிற்குப் பிப்ரவரி 17ஆம் தேதி $14,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அல்ஜுனிட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திரு பிரித்தம் சிங், தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வார் என நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தெரிவித்தார்.
ஒரு குற்றத்திற்கு $10,000 அல்லது அதற்குமேல் அபராதம் விதிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே தகுதி நீக்கம் செய்யப்படுவார். இரு குற்றங்களுக்குத் தண்டனையாக விதிக்கப்பட்ட அபராதத்தின் ஒட்டுமொத்த மதிப்பைக் கருத்தில் எடுத்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரைத் தகுதி நீக்கம் செய்ய முடியாது என அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் தெரிவித்ததாக நாடாளுமன்றத்தில் திரு சியா கூறினார்.
திரு சிங்கிற்குப் பொய்யுரைத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கிய முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய அவைத் தலைவர் இந்திராணி ராஜா, உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவகாரங்களில் நேர்மையைக் கட்டிக்காக்க வேண்டும் என்றார்.
பொய்யான, தவறான தகவல்களை நாடாளுமன்றத்தில் வேண்டுமென்றே வெளியிடுவது, நாடாளுமன்றத்தை அவமதிப்பதற்குச் சமம் என அவர் தெரிவித்தார்.
நமது நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீது பொதுமக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்க வேண்டுமெனில், அனைத்து உறுப்பினர்களும் ஆக உயரிய நேர்மைத் தரத்தையும் நாடாளுமன்ற நடத்தை விதிகளையும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

