நாடாளுமன்ற எதிரணித் தலைவராகத் தொடர பிரித்தம் சிங்கின் தகுதி குறித்து விவாதிக்கப்படும்

2 mins read
82a30c82-3f10-425b-a987-2746912a0c99
2025 பிப்ரவரி 17ல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பிரித்தம் சிங்குக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவில் திரு பிரித்தம் சிங் பொய்யுரைத்ததாகக் குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் நாடாளுமன்ற எதிரணித் தலைவராகச் செயல்படத்  தகுதி உள்ளவரா இல்லையா என்ற விவாதம் நடைபெறவுள்ளது.

இதன்தொடர்பான முன்மொழிவை அவைத்தலைவர் இந்திராணி ராஜா, அடுத்துவரும் நாடாளுமன்ற அமர்வுக்காக முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றம் அடுத்ததாக ஜனவரி 12ஆம் தேதி கூடும். ஜனவரி 13ல் இது தொடர்பான விவாதங்கள் ஜனவரி 13 அல்லது அந்த வாரத்தின் பிற்பகுதியில் நடைபெறும் என்று அவைத்தலைவர் அலுவலகம், வியாழக்கிழமை (ஜனவரி 9) அறிக்கை வெளியிட்டது. 

திரு சிங்கின் நடத்தை, நாடாளுமன்றத்தில் தரக்குறைவாகவும் தகாத விதத்திலும் இருக்கும் பட்சத்தில் அவர் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக நிலைத்திருக்கத் தகுந்தவரா என்பது குறித்து விவாதம் நடத்தும்படி அந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்தது.

நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் பொய்யுரைத்ததன் தொடர்பில் திரு சிங் குற்றஞ்சாட்டப்பட்டதையும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அத்துடன், திரு சிங், தமது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பொய்யுரைக்கும்படி வழிகாட்டியதாகவும் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழு உறுதி செய்ததாகவும் அறிக்கை கூறுகிறது. 

திரு சிங்கிற்கு எதிரான தீர்ப்பை உயர் நீதிமன்றம் நிலைநாட்டியுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. 

பொய்யுரைத்ததன் தொடர்பில் திரு பிரித்தம் குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில் தகுந்த பதில் நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றம் கலந்துரையாடவேண்டும் என்று குமாரி இந்திராணி ராஜா முதன்முதலாகக் கூறியதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2025 பிப்ரவரி 17ல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட திரு சிங்குக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.  இந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது. 

நாடாளுமன்ற எதிரணித் தலைவரின் செயல்களையும் குற்றங்களையும் நாடாளுமன்றம் முக்கியமாகக் கருதவேண்டும் என்று குமாரி இந்திராணி கூறியிருந்தார்.

“சில நாடுகளில் பொய்யுரைத்த, ஏமாற்றிய அல்லது சட்டத்தை மீறும் வகையில் நடந்துகொண்ட தலைவர்கள் எந்தச் சட்ட பின்விளைவுகளையோ அரசியல் பின்விளைவுகளையோ சந்திக்காமல் தப்பிவிடுகின்றனர். சிங்கப்பூரில் இத்தகைய தரநிலைகளை ஏற்க முடியாது,” என்று அவர் கூறினார்.

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பாட்டாளிக் கட்சி என்ன செய்யப்போகிறது என்பது அதன் விருப்பம் என்றும் குமாரி இந்திராணி கூறினார். 

ஜனவரி 3ல் கட்சியின் அமைப்புச் சட்டங்களைத் திரு சிங் மீறினாரா என்பதை ஆராய கட்டொழுங்குக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்று பாட்டாளிக் கட்சி அறிவித்தது. 

2020 பொதுத் தேர்தலில் 93 இடங்களில் 10 இடங்களைப் பாட்டாளிக் கட்சி வென்றதை அடுத்து, திரு சிங்கை அப்போதைய பிரதமர் லீ சியன் லூங் எதிரணித் தலைவராக நியமித்தார். இந்தப் பொறுப்பில் திரு சிங் நீடித்திருப்பார் என்று பிரதமர் லாரன்ஸ் வோங், 2025 தேர்தலுக்குப் பிறகு கூறினார். 

எதிரணித் தலைவர் என்ற முறையில் அரசாங்கம் முடிவு செய்துள்ள நாடாளுமன்றச் சலுகைகள் சில, திரு சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 385,000 வெள்ளி படித்தொகை, மூன்று உதவியாளர்கள் வரை நியமித்துக்கொள்வதற்கான கூடுதல் தொகை ஆகியவை அந்தச் சலுகைகளில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்