பிரித்தம் சிங் தலைவராக நீடிப்பது குறித்து ஜூன் 28ல் விவாதிக்கப்படும்

பாட்டாளிக் கட்சி மேல்நிலைக் குழுவின் சிறப்புக் கூட்டம்

பிரித்தம் சிங் தலைவராக நீடிப்பது குறித்து ஜூன் 28ல் விவாதிக்கப்படும்

2 mins read
b633a9fb-a166-484a-a9c6-309f1cbbe641
2025ஆம் ஆண்டு டிசம்பரில் திரு பிரித்தம் சிங்கிற்கான தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதிசெய்ததைத் தொடர்ந்து, பாட்டாளிக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்களும் மேல்நிலைக் குழுவினரும் சிறப்புக் கூட்டத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தனர். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங், கட்சியின் தலைமைச் செயலாளராகத் தொடர்ந்து நீடிப்பதற்குத் தகுதியானவரா என்பது குறித்துக் கலந்துபேச, அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வரும் ஜூன் 28ஆம் தேதி சந்திக்கவுள்ளனர்.

அது சிறப்புக் கூட்டத்தின்போது நடைபெறும் என்று பாட்டாளிக் கட்சி எழுத்துபூர்வ அறிவிப்பின் மூலம் தெரிவித்ததாகச் சீன நாளிதழான சாவ்பாவ் செய்தி வெளியிட்டது.

அந்த எழுத்துபூர்வ அறிவிப்பில் மூன்று அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

முதலாவதாகத் திரு பிரித்தம் சிங், நாடாளுமன்றக் குழுவிடம் இருமுறை பொய் உரைத்ததாகத் தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்து மேல்நிலைக் குழுவிடம் விளக்கம் அளிக்கவேண்டும்.

இரண்டாவதாக, பாட்டாளிக் கட்சியின் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 30ஐ மீறியதற்காகத் திரு சிங் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பொதுப் பதவிகளில் இருக்கும் கட்சியின் பிரதிநிதிகள், ‘கட்சியிடமும் சிங்கப்பூர் மக்களிடமும் தங்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும்’ நடந்துகொள்ள வேண்டும் என்று அந்தச் சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு சிங் விலகாவிட்டால், அவர் பதவியில் தொடரலாமா என்பதைத் தீர்மானிக்க மேல்நிலைக் குழு உறுப்பினர்களிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நான்காவது பதவிக் காலத்தைத் தொடரும் திரு சிங், 2018ஆம் ஆண்டுமுதல் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

பாட்டாளிக் கட்சியின் மேல்நிலைக் குழுவில் ஏறக்குறைய 100 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சிறப்புக் கூட்டம் இம்மாதம் 28ஆம் தேதி நண்பகலில் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு, அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரல்ட் கியாம் தலைமைதாங்குவார்.

சென்ற ஆண்டு (2025) பிப்ரவரியில் திரு பிரித்தம் சிங்கின் வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

சென்ற ஆண்டு டிசம்பரில் உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பில் மாற்றம் எதனையும் செய்யாததைத் தொடர்ந்து, பாட்டாளிக் கட்சியின் மேல்நிலைக் குழு உறுப்பினர்கள், சிறப்புக் கூட்டத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்