பாட்டாளிக் கட்சியின் அரசியலமைப்புச் சட்டதிட்டங்களை அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மீறினாரா என்பதைக் கண்டறிய ஒழுங்குநடவடிக்கைக் குழு ஒன்றை அக்கட்சி அமைத்தது.
இந்நிலையில், பிரித்தம் சிங் குறித்துக் கருத்து தெரிவிக்க அக்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அக்குழு தற்போது அழைப்புவிடுத்துள்ளது.
அதற்கான கூட்டம் வரும் வாரங்களில் நடத்தப்படும் எனப் பாட்டாளிக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2021ஆம் ஆண்டு, பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததன் தொடர்பில் அதனைக் குறித்து ஆராய ஒழுங்குநடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.
அப்போது, பின்பற்றப்பட்ட நடைமுறை போலவே தற்போதும் பாட்டாளிக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹி டிங் ரு, இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம், முன்னாள் ஹவ்காங் நாடாளுமன்ற உறுப்பினர் பிங் எங் ஹுவாட் ஆகியோர் திரு பிரித்தம் சிங்கின் நடத்தை குறித்து ஆராயும் ஒழுங்குநடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

