நேர்மையான உரையாடல்களில் மக்களை ஈடுபடுத்த நாட்டம்: பிரித்தம்

2 mins read
a8a54bce-19be-4e2b-ae52-f82e9f27fb4b
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தகவல்களை அளித்து, நேர்மையான உரையாடல்களில் மக்களை ஈடுபடுத்தி அவர்களை நம்பும் ஒரு சமூகத்தில் உண்மையான பாதுகாப்பு காணப்படும் என்று பாட்டாளிக் கட்சி நம்புவதாகக் கூறியுள்ளார் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவான கட்டுப்பாடுகள், சமநிலை  ஆகியவற்றிற்கான தேவை சிங்கப்பூரில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதிவிரைவான தொழில்நுட்பம், பொருளியல் மாற்றங்களுக்கு மத்தியில் தொழிலாளர்ளுக்கு அதிகரித்து வரும் அழுத்தங்கள்குறித்தும் எச்சரித்தார்.

புதன்கிழமை (டிசம்பர் 31) அன்று வெளியிட்ட பாட்டாளிக் கட்சியின் புத்தாண்டுச் செய்தியில், தொழிலாளர்கள், உட்பட சிங்கப்பூரர்களின் உரிமைகளையும் பாட்டாளிக் கட்சி தொடர்ந்து பாதுகாக்கும் என்று கூறினார் திரு சிங்.

மேலும் அந்த அறிக்கையில், ‘‘கடந்த பல ஆண்டுகளாக நாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பிளவுபட்ட சூழலில் வாழ்கிறோம்,’’ என்று சுட்டிய அவர், செயற்கை நுண்ணறிவின் வேகமான முன்னேற்றம் சிங்கப்பூரின் பல தொழிலாளர்களுக்கு வாய்ப்பு மற்றும் ஆபத்தை எவ்வாறு கொண்டு வருகிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

‘‘எனவே, இது போன்ற தருணங்களில், அரசாங்கம் திறமையாக மட்டுமல்லாமல் நியாயமாகவும் இருக்க வேண்டும்,’’ என்று கருதுவதாகக் கூறியுள்ளார் திரு சிங்.

மேலும் தேசத்தில் தொழிலாளர்களும் குடும்பங்களும் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு சார்ந்த பிரச்சினைகள், வேலைப் பாதுகாப்பின்மை, சமூகத்தில் நிலவும் சவால்கள் ஆகியவற்றை கருத்தில்கொள்கையில் பரிவுமிகுந்த கொள்கைகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

“நமது நாட்டின் நிர்வாகம் வெளிப்படையாகவும், அது சேவை செய்யும் மக்களுக்குப் பொறுப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய, ஒவ்வோர் அமைச்சிலும் நாடாளுமன்றத் தேர்வுக் குழுக்கள் மற்றும் தகவல் சுதந்திரச் சட்டம் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை நாங்கள் தொடர்ந்து கோருவோம்,” என்றும் கூறினார் திரு சிங்.

சிங்கப்பூரின் வரலாற்றில் 2025ஆம் ஆண்டை ‘முக்கியமான’ ஆண்டாக விவரித்த அவர், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு தீர்மானிக்கும் தருணமாக இருந்தது என்றும் கூறினார்.

இந்தத் தேர்தலில், அல்ஜுனிட், செங்காங் குழுத் தொகுதிகளிலும் ஹவ்காங் தனித்தொகுதியிலும் பாட்டாளிக் கட்சி தனது நிலையைப் பலப்படுத்தியது. மேலும் ஆளும் மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் கணிசமான இடத்தை மீண்டும் பெற்றதுடன் 2015 பொதுத் தேர்தலில் கடைசியாகப் பார்த்த வாக்கு வித்தியாசங்களைப் பெற்றது என்றும் திரு சிங் சொன்னார்.

“சமச்சீர் அரசியல் முறை ஓர் ஆடம்பரம் அல்ல. மாறாக நிலையான, நிலைத்தன்மைவாய்ந்த சிங்கப்பூருக்கான தேவை என்பதை ஒப்புக்கொண்டு, சிங்கப்பூரர்கள் எங்களுடன் இந்தப் பயணத்தைத் தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றும் திரு சிங் தமது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். 

குறிப்புச் சொற்கள்