அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளைச் சமாளிக்க உதவும் வகையில், பள்ளி மாணவர்கள், உடற்குறையுள்ளோர், சில மூத்த குடிமக்கள் மற்றும் நோயாளிகளுக்குச் சேவை வழங்கும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அரசாங்கம் மூன்று மாத கால ஆதரவை வழங்கும்.
போக்குவரத்துக் கட்டண வருவாயில் 13 விழுக்காட்டுக்குச் சமமான இந்த ஆதரவு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்படும் சேவைகளை உள்ளடக்கும்.
“இந்தப் போக்குவரத்து சேவை வழங்குநர்கள் குறுகிய காலத்தில் எவ்வித இடையூறும் இன்றி தொடர்ந்து இயங்குவதற்கு உதவுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம்,” என கல்வி அமைச்சு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவை வியாழக்கிழமை (ஏப்ரல் 9) வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தன.
சிங்கப்பூரில் தனியார் பேருந்து நிறுவனங்கள், ஈரான் போரால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்கப் போராடி வருகின்றன.
இந்தத் துறையைப் பிரதிநிதிக்கும் இரண்டு வர்த்தகச் சங்கங்கள், சிறிய நிறுவனங்கள் இந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல் மூடப்படலாம் என்றும் இதனால் இத்துறையில் ஒரு நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்துள்ளன.
தனது வசம் உள்ள 60 டீசல் பேருந்துகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான மார்ச் மாதச் செலவு 100,000 வெள்ளியைத் தாண்டியது என்று அவை குறிப்பிட்டன.
இது பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்குவதற்கு முன்பு ஆன செலவைவிட இரு மடங்குக்கும் அதிகம்.
அதன் உரிமையாளரான திரு லயனல் லிம், ஏப்ரல் மாதத்தில் மற்றொரு பெரிய செலவு உயர்வுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், “மாணவர்களையும் ஊழியர்களையும் ஏற்றிச் செல்லும் பயணங்கள் மூலம் கிடைக்கும் வருவாய், ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட காலத்திலிருந்து மாறாமல் உள்ளது,” என்று அவர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த தொலைபேசிவழி நேர்காணலில் கூறினார்.
இவற்றில் சில தற்காலிகமான அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட ஏற்பாடுகளாக இருந்தாலும், பல தற்போதைய நெருக்கடிக்கு வெகு முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட விலைகளில் ஒப்பந்தம் செய்யப்படுகின்றன.
சிறு நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு
சுயதொழில் செய்யும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களைப் பிரதிநிதிக்கும் சிங்கப்பூர் பள்ளிப் போக்குவரத்துச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டேரி லிம், “உயர்ந்துவரும் எரிபொருள் விலைகளைச் சமாளிக்கத் தேவையான பணப்புழக்கம் இல்லாததால் சிறிய நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன,” என்று கூறினார்.
“இதே நிலை தொடர்ந்தால், தங்களுக்குத் தேவையான பேருந்துகளை வழங்கப் போதுமான துணை ஒப்பந்ததாரர்கள் இல்லாததால், நடத்துநர்களில் சிலர் ஜூன் மாத விடுமுறைக்குள் தொடக்கப் பள்ளிகளுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களைக் கைவிட்டுவிடுவார்கள் என்று அஞ்சுகிறோம்,” என்று திரு லிம் கவலை தெரிவித்தார்.

