தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரையறுக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்த வங்கி சேவைகளை கார்ட்லைஃப் மீண்டும் தொடங்க அனுமதி

2 mins read
5ac5e5e7-4a95-4558-9dbc-7451c3140844
கார்ட்லைஃப் நிறுவனம் செப்டம்பர் 15, 2024 முதல் ஜனவரி 13, 2025 வரை ஒரு மாதத்திற்கு 30 யூனிட் புதிய தொப்புள்கொடி ரத்தத்தை சேகரிக்கவோ, சோதிக்கவோ, செயலாக்கவோ, சேமிக்கவோ முடியும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனியார் தொப்புள்கொடி ரத்த வங்கியான கார்ட்லைஃப் நிறுவனம், அதன் சேமிப்பு வளாகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக, அதன் சேவைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்ட எட்டு மாதங்களுக்கும் மேலான பிறகு, இப்போது வரையறுக்கப்பட்ட அடிப்படையில் தொப்புள்கொடி ரத்த வங்கிச் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கார்ட்லைஃப் நிறுவனம் செப்டம்பர் 15, 2024 முதல் ஜனவரி 13, 2025 வரை ஒரு மாதத்திற்கு 30 யூனிட் புதிய தொப்புள்கொடி ரத்தத்தை சேகரிக்கவோ, சோதிக்கவோ, செயலாக்கவோ, சேமிக்கவோ முடியும் என்று சுகாதார அமைச்சு ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

“ஜனவரி 13, 2025 அன்று அதன் உரிமத்தை அடுத்து புதுப்பிப்பதற்கு முன், கார்ட்லைஃப்பின் செயல்பாட்டு நிலைத்தன்மை, பணியாளர்களின் திறன்கள், அமைச்சின் ஒழுங்குமுறைத் தேவைகளுக்குத் தொடர்ந்து இணங்குதல் ஆகியவற்றை சுகாதார அமைச்சு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும்,” என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

சுகாதார அமைச்சின் தணிக்கைகள் கார்ட்லைஃப் அதன் தொப்புள்கொடி ரத்த வங்கி சேவைகளை மீண்டும் வழங்குவதற்கான அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

“உதாரணத்துக்கு, கார்ட்லைஃப் அதன் புதிய தொப்புள்கொடி ரத்தச் செயலாக்க முறையைச் சரிபார்த்து, ஏற்றுக்கொள்ளக்கூடிய வெப்பநிலை கண்காணிப்பு நடைமுறைகளுடன் புதிய வெப்பநிலை கண்காணிப்பு முறையைச் செயல்படுத்தியது. மேலும் அதன் நிகழ்வு கண்காணிப்பு, விரிவாக்க பணிப்பாய்வுகள் ஆகியவை நெறிப்படுத்தப்பட்டுள்ளன,” என்றும் அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

2023, டிசம்பர் 15ஆம் தேதி அன்று, கார்ட்லைஃப் நிறுவனத்திற்கு ஆறு மாதத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. மேலும் புதிய தொப்புள்கொடி ரத்தம் மற்றும் மனித திசுக்களைச் சேகரிப்பது, சோதனை செய்தல், செயலாக்குதல் மற்றும்/அல்லது சேமிப்பதை நிறுத்த வேண்டியிருந்தது. கார்ட்லைஃப் அதன் புதிய தொப்புள்கொடி ரத்தச் செயலாக்க முறையைச் சரிபார்ப்பதற்காக ஜூன் 15ஆம் தேதியன்று, நடப்பில் இருந்த தடை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

கார்ட்லைஃப் அதன் சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது வாடிக்கையாளர்களின் நலனை உறுதி செய்வதற்காக அதன் சேவைகளைப் படிப்படியாக அதிகரிக்க கவனமாக அளவீடு செய்யப்பட்ட அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

கார்ட்லைஃப், அதன் நிர்வாகம், மனிதவளம், செயல்முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்துள்ளது என்பதும் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டபோது கருத்தில் கொள்ளப்பட்டன என்றும் அமைச்சின் பேச்சாளர் விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்