குழந்தைகள் இல்லாத, இரு வருமானம் கொண்ட தம்பதியரின் தனியார் வீட்டு மோகம்

குழந்தைகள் இல்லாத, இரு வருமானம் கொண்ட தம்பதியரின் தனியார் வீட்டு மோகம்

2 mins read
‘புரோப்பர்ட்டிகுரு’ நிறுவன ஆய்வில் தெரியவந்தது
70a13170-aea9-41de-a1c8-8c4f8ecebe29
குழந்தைகள் இல்லாத, $10,000க்குமேல் கூட்டு வருமானம் கொண்ட, 30 வயது நிரம்பிய தம்பதியரில் 40 விழுக்காட்டினர் புதிய கூட்டுரிமை வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில், குழந்தைகள் இல்லாத, இரு வருமானம் ஈட்டும் தம்பதியரிடையே (DINKs - Dual Income, No Kids) தனியார் சொத்துகளை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக ‘புரோப்பர்ட்டிகுரு’ (PropertyGuru) நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வு கூறுகிறது.

அதிக வருமானம் ஈட்டும் இத்தகைய தம்பதியர், வீட்டு விலை அதிகரித்தபோதும் தனியார் வீடுகளை வாங்கவே விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.

ஆய்வின் முக்கிய அம்சங்கள்

2025 நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் என ஏறத்தாழ 2,000 பேரிடம் நடத்தப்பட்ட வருடாந்தர ஆய்வின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) வெளியிடப்பட்டன.

இதன்படி, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் சொத்து வாங்கத் திட்டமிடும் இத்தகைய தம்பதியரில் மூன்றில் ஒரு பங்கினர், தனியார் குடியிருப்புகளைத் தேர்வுசெய்ய விரும்புகின்றனர்.

குறிப்பாக, கணவனும் மனைவியும் கூட்டாக மாதம் குறைந்தது 10,000 வெள்ளி வருமானம் ஈட்டும் தம்பதியரில், 44 விழுக்காட்டினர் புதிய கூட்டுரிமை வீடுகளை (Condominium) வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்கு மாறாக, 55 வயது நிரம்பிய தம்பதியரில் 73 விழுக்காட்டினர் புதிய வீடு வாங்கும் திட்டம் ஏதுமில்லை என்று கூறியுள்ளனர்.

ஆர்வத்துக்கான காரணங்கள்

நீச்சல் குளம் போன்ற கூடுதல் வசதிகளை நாடித் தம்பதியர் பலர் தனியார் குடியிருப்புக்கு மாற விரும்புகின்றனர்.

கூட்டு வருமானம், புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்குவதற்கான வருமான உச்சவரம்பான 14,000 வெள்ளியைத் தாண்டுவதால், சிலர் தனியார் குடியிருப்புகளின் பக்கம் திரும்புவதாகத் தெரிகிறது.

சொத்து மதிப்பு நீண்ட காலத்தில் உயரும் என்ற நம்பிக்கையில் தம்பதியர் இதனை ஒரு சிறந்த முதலீடாகப் பார்க்கின்றனர்.

ஒற்றையரின் ஆர்வம்

இளம் மற்றும் அதிக வருமானம் ஈட்டும் ஒற்றையர்களும் சொத்துச் சந்தையில் ஆர்வம் காட்டுகின்றனர்.

குறைந்த வட்டி விகிதங்கள், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பெரிய வீடுகளை நோக்கி அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். 30 முதல் 34 வயதுக்குட்பட்ட, மாதம் 10,000 வெள்ளிக்குமேல் வருமானம் ஈட்டும் ஒற்றையர்களில் 40 விழுக்காட்டினர் தனியார் குடியிருப்புகளை வாங்க விரும்புகின்றனர்.

முன்பு அதிகமான வட்டி விகிதம், பணவீக்கம் காரணமாக வீடு வாங்குவதில் தயக்கம் நிலவியது. ஆனால், இப்போது சந்தை நிலைத்தன்மை அதிகரித்துவருவதால், சொத்து வாங்குவோர் விலையை அணுக்கமாகக் கவனித்து, திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்