சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விலை இவ்வாண்டின் 3வது காலாண்டில் 0.7 விழுக்காடு குறைந்திருப்பதை நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டு விலைச் சரிவு 1.1 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கும் குறைவாகவே வீட்டு விலை சரிந்தது. முந்தைய காலாண்டின் 0.9 விழுக்காடு விலை அதிகரிப்புக்கு மாறாக மூன்றாவது காலாண்டில் விலை குறைந்துள்ளது.
தனியார் வீடுகளின் வாடகை 0.8 விழுக்காடு உயர்வு கண்டது. 2023ஆம் ஆண்டின் 3வது காலாண்டுக்குப் பிறகு 2024, 3வது காலாண்டில் முதல் முறையாக தனியார் வீட்டு வாடகை அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய காலாண்டில் 0.8 விழுக்காடு குறைந்தது.
தரை வீடு அல்லாத தனியார் வீடுகளுக்கான வாடகைகள், மத்தியப் பகுதிக்கு வெளியே புறநகர்ப் பகுதியில் மிக அதிகமாக உயர்ந்துள்ளன.
அத்தகைய இடங்களில் முந்தைய காலாண்டில் இருந்த 1.3 விழுக்காடு வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது, 3வது காலாண்டில் 2.2 விழுக்காடு கூடியுள்ளது.
இரண்டாவது காலாண்டின் 1.4 விழுக்காடு வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில், மற்ற மத்திய பகுதிகளில் உள்ள வீடுகளின் வாடகை 1.7 விழுக்காடு அதிகரித்தது.
முதன்மை வட்டார தரை வீடுகள் அல்லாத தனியார் வீட்டு வாடகை முந்தைய காலாண்டில் 0.1 விழுக்காடு குறைந்ததைவிட 3வது காலாண்டில் 1,6 விழுக்காடு சரிவு கண்டுள்ளது.
இதற்கிடையே தரை வீடுகள் அல்லாத சொத்துகளின் விலை 3வது காலாண்டில் 0.1 விழுக்காடு மட்டுமே உயர்ந்தது. இது, முந்தைய காலண்டில் 0.6 விழுக்காடு வளர்ச்சி கண்டது.