2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் தனியார் ஜெட் சேவைக்கான தேவை குறைந்துள்ளது.
இருப்பினும் கொவிட்-19 காலத்திற்கு முன்பு இருந்த நிலவரத்தை விட தற்போதைய நிலவரம் நன்றாக இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.
2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 4,521 தனியார் ஜெட் சேவைகள் பயன்படுத்தப்பட்டன. 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் அந்த எண்ணிக்கை 3,528ஆக இருந்தது.
இதுகுறித்து தனியார் ஜெட் சேவை வழங்கும் அல்டன் ஏவியேஷன் நிறுவனத்தின் ஏடம் கவ்பர்ன் பிசினஸ் டைம்சுக்கு நேர்கானல் தந்தார்.
“சிங்கப்பூரில் கடந்த ஆண்டு தனியார் ஜெட் சேவைக்கான தேவை சற்று குறைந்தது. வர்த்தக ரீதியாக சாங்கி மற்றும் சிலேத்தார் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் தனியார் ஜெட் விமானங்களின் சேவை கிட்டத்தட்ட 8 விழுக்காடு சரிந்தது,” என்று ஏடம் தெரிவித்தார்.
ஆயினும் மற்ற நாடுகளுடன் சிங்கப்பூரை ஒப்பிடுகையில் தனியார் ஜெட் சேவைக்கான தேவை சீராக உள்ளது. கொள்ளை நோய்க்கு முன் இருந்ததைவிட தற்போது அதன் தேவை 30 விழுக்காடு கூடியுள்ளது என்று அவர் கூறினார்.
கொவிட் காலகட்டத்தில் சுகாதார விதிமுறைகள் காரணமாக விமான நிறுவனங்கள் அவர்களது சேவையை சரியாகத் தொடர முடியவில்லை. அதனால் தனியார் ஜெட் சேவைக்கான தேவை பலமடங்கு அதிகரித்தது.
அதன்பின்னர் வர்த்தக தேவைகள் அதிகரித்ததால் தனியார் ஜெட் சேவைக்கான தேவையும் அதிகரித்தது.
தற்போது விமான நிறுவனங்கள் அவர்களது சேவையை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றியுள்ளதால் தனியார் ஜெட் சேவைகளுக்கான தேவை குறையத்தொடங்கியுள்ளது.

