சிக்கலான வீட்டு விற்பனைகளைத் தனியார் வழக்கறிஞர்கள் கையாளவேண்டும்: வீவக

சிக்கலான வீட்டு விற்பனைகளைத் தனியார் வழக்கறிஞர்கள் கையாளவேண்டும்: வீவக

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Oct 2026 - 7:43 pm

2 mins read

மறுவிற்பனை வீட்டின் பரிவர்த்தனை ஒன்று சிக்கலானது என்பதால், அதற்கான சட்டபூர்வப் பணிகளை மேற்கொள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) மறுத்துள்ளது. அத்துடன், வீட்டின் விற்பனையாளர்களைச் சொந்தமாக வழக்கறிஞரை நியமித்துக்கொள்ளுமாறும் கழகம் அறிவுறுத்தியது.

தஞ்சோங் பகார் பிளாசா கடைத்தொகுதியிலுள்ள மூவறை வீட்டின் விற்பனை குறித்து ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ எழுப்பிய கேள்விகளுக்கு அக்டோபர் 6ல் பதிலளித்த வீவக, அனைத்துப் பயனாளிகளின் நலன்களும் பாதுகாக்கப்படுவதையோ அல்லது அவர்களுக்குச் சரியான ஆலோசனை வழங்கப்படுவதையோ உறுதி செய்வது சாத்தியமல்ல என்று தெரிவித்தது.

அந்தப் பரிவர்த்தனைக்குத் தரகராகச் செயல்பட்ட சொத்து முகவர் வேரா வோங், செப்டம்பர் 28ல் அதன் தொடர்பான மின்னஞ்சலை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

குத்தகை முடிய கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் எஞ்சியிருக்கும் அந்த வீட்டின் விற்பனை தொடர்பாக, அவரது வாடிக்கையாளரான வீட்டின் விற்பனையாளர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடமிருந்து பெற்ற மின்னஞ்சல் அது.

“$625,000 என்ற மறுவிற்பனை விலையானது அண்மையில் மறுவிற்பனைப் பரிவர்த்தனை விலையான $655,000விடக் குறைவாக இருப்பதைக் கவனிக்கிறோம். எனவே, அந்த விற்பனையில் வீவக வளர்ச்சி கழகத்தால் செயல்பட இயலாது,” என்று அக்கடிதம் குறிப்பிட்டது.

அந்த விற்பனையில் வீவக ஏன் செயல்பட முடியாது என்பது குறித்து விற்பனையாளருக்கு மேற்கொண்டு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

செப்டம்பர் 30ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய திருவாட்டி வோங், விற்பனைக்கான சட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து தீர்மானிக்கும் உரிமை வீவகவுக்கு உள்ளது என்பதை புரிந்துகொண்டதாகக் கூறினார். 

ஆயினும், விற்பனை விலைக்கும், ஒப்பிடத்தகுந்த அண்மைய வீட்டு விற்பனை விலைக்கும் இடையிலான 30,000 வெள்ளி வேறுபாடு காரணமாக, முகவராகத் தாம் பணியாற்றிய 18 ஆண்டுகளில் வீவக இவ்வாறு விற்பனையில் செயல்பட மறுத்ததை ஒருபோதும் சந்தித்ததில்லை என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
வீவகவீட்டு விற்பனைவழக்கறிஞர்மின்னஞ்சல்