உபியில் தனியார் நடமாட்டச் சாதனம் - லாரி மோதல்

1 mins read
76 வயது முதியவருக்கு லேசான காயம்
ea3a6a41-1d2c-44a0-bdf7-74d450d00dad
முதியவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. - எஸ்ஜி ரோடு விஜிலான்ட்/ஃபேஸ்புக்

உபியில் நவம்பர் 26ஆம் தேதி நடந்த, தனியார் நடமாட்டச் சாதனமும் லாரியும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து விசாரிப்பதாகக் காவல்துறை கூறியுள்ளது.

தனியார் நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்தியவருக்கு வயது 76.

இச்சம்பவம் தொடர்பான காணொளியை எஸ்ஜி ரோடு விஜிலான்ட் குழு ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது.

காணொளியில், நடந்துசெல்வோருக்கான பாதையிலிருந்து சாலைக்கு தனியார் நடமாட்டச் சாதனத்தை ஆடவர் ஒருவர் ஓட்டிச் செல்வது தெரிகிறது.

அப்போது மிகப் பெரிய லாரி, தொழில்துறை வளாகத்திலிருந்து சாலையை நோக்கி வருவதும் அக்காணொளியில் பதிவாகியுள்ளது.

ஆடவரை லாரி மோதுவதும் அவர் விரைந்து இடது கையால் லாரியிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு வலது கையைத் தரையில் ஊன்றிக்கொள்வதும் தெரிகிறது.

முதலில் அவரது தனியார் நடமாட்டச் சாதனத்தின் ஒரு பகுதி லாரியின் அடியில் சிக்கியிருந்தது. லாரி பின்னோக்கி நகர்ந்ததும் அவரது நடமாட்டச் சாதனம் விடுவிக்கப்பட்டது.

பின்னர் தரையில் விழுந்த அந்த ஆடவர், எழுந்து அமர்வதும் லாரி ஓட்டுநரும் வழிப்போக்கர் ஒருவரும் ஆடவரை நோக்கிச் செல்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

உபி ரோடு 2ஐ நோக்கிச் செல்லும் உபி ரோடு 1ல் நடந்த இவ்விபத்து குறித்து பிற்பகல் 3.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

தனியார் நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்திய முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவதை அவர் நிராகரித்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்