வீவக மறுவிற்பனை வீடு வாங்க தனியார் வீட்டு உரிமையாளர்கள் இனி 15 மாதம் காத்திருக்கத் தேவையில்லை

வீவக மறுவிற்பனை வீடு வாங்க தனியார் வீட்டு உரிமையாளர்கள் இனி 15 மாதம் காத்திருக்கத் தேவையில்லை

2 mins read
7e41bbd2-2bcb-4561-b32d-7434ff47ebef
2026 முதல் காலாண்டில், கிட்டத்தட்ட ஏழாண்டுகளில் முதன்முறையாகக் குறைந்த மறுவிற்பனை வீடுகளின் விலை, இரண்டாவது காலாண்டிலும் தொடர்ந்து சரிவைக் கண்டது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளை வாங்க தனியார் வீட்டு உரிமையாளர்கள் இனி 15 மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை என தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் அறிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) நடைபெற்ற 11வது சிங்கப்பூர் பொருளியல் மறுஆய்வு மாநாட்டில் உரையாற்றிய அவர், சந்தை நிலவரம் மேம்பட்டுள்ளதாகவும் சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கை அதன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டதாகவும் கூறினார்.

சிங்கப்பூர் பொருளியல் மறுஆய்வு மாநாட்டில் உரையாற்றினார் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட்.
சிங்கப்பூர் பொருளியல் மறுஆய்வு மாநாட்டில் உரையாற்றினார் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்த மாற்றத்தின்மூலம், எந்த வயதைச் சேர்ந்த தனியார் வீட்டு உரிமையாளர்களும் எந்த அளவிலான மானியமில்லா வீவக மறுவிற்பனை வீட்டையும் வாங்குவதற்கு இனிக் காத்திருக்க வேண்டியதில்லை.

வீவக மறுவிற்பனை வீட்டு விலை உயர்வு, 2022ல் 10.4 விழுக்காடாக இருந்த நிலை மாறி, 2025ல் 2.9 விழுக்காடு எனக் கணிசமாகக் குறைந்தது. மேலும், 2026 முதல் காலாண்டில், கிட்டத்தட்ட ஏழாண்டுகளில் முதன்முறையாகக் குறைந்த மறுவிற்பனை வீடுகளின் விலை, இரண்டாவது காலாண்டிலும் தொடர்ந்து சரிவைக் கண்டது.

பணப்புழக்கம் அதிகம் கொண்ட தனியார் வீட்டு உரிமையாளர்கள் மானியமில்லா வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்குவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 2022 செப்டம்பரில் 15 மாதக் காத்திருப்புக் காலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2025 மே மாதம் தேசிய வளர்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்ற திரு சீ, இந்த நடவடிக்கை நிரந்தரமானதன்று என்றும் நிலைமை சீரடையும்போது அது விலக்கிக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

புதிய பிடிஓ வீடுகளின் தொடர் விநியோகமும் மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கையும் விலையைக் கட்டுக்குள் வைக்கும் என்பதால் அக்கட்டுப்பாட்டை மறுஆய்வு செய்ய 2027 அல்லது 2028 வரை காத்திருக்க வேண்டியிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, 2025 மார்ச் 31 நிலவரப்படி, காத்திருப்புக் காலத்திலிருந்து விலக்கு கோரி வீவக பெற்ற ஏறக்குறைய 5,500 மேல்முறையீடுகளில் கிட்டத்தட்ட கால்வாசி மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்