சிங்கப்பூரில் செயல்படும் தனது அனைத்து உணவகங்களையும் பிரைவ் குழுமம் மூடியுள்ளது.
பிரைவ் குழுமம் ஆகஸ்ட் 31 இரவுடன் அதன் அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது.
ஹாலண்ட் வில்லேஜ், பூமலை, வீலாக் பிலேஸ், ஆசிய மரபுடைமை அருங்காட்சியகம் உள்ளிட்ட சிங்கப்பூரின் ஐந்து இடங்களில் பிரைவ்வின் உணவகங்கள் செயல்பட்டு வந்தன.
ஆசிய மரபுடைமை அருங்காட்சியகத்தில் உள்ள இரண்டு உணவகங்களையும் திங்கட்கிழமை (செப்டம்பர் 1) முதல் காமன்வெல்த் கான்சஃப்ட்ஸ் (Commonwealth Concepts) எடுத்து நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிரைவ் குழுமம் 2007ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அடியெடுத்து வைத்தது. அதன்பின்னர் படிப்படியாகப் பல இடங்களில் உணவகங்களை அது திறந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகச் சில உணவகங்களை அது மூடியது.
கொவிட்-19க்கு பின்னர் சிங்கப்பூரில் செயல்படும் உணவு மற்றும் பான நிறுவனங்களுக்குப் பெரும் அடியாக உள்ளது. போதுமான லாபம் இல்லாதது, தகுந்த வேலை ஆள்கள் இல்லாதது போன்றவற்றால் உணவகங்கள் மூடப்படுகின்றன.
2024ஆம் ஆண்டில் புதிதாக 3,790 உணவகங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் 3,047 உணவகங்கள் மூடப்பட்டன.
ஆகஸ்ட் மாத நிலவரப்படி இவ்வாண்டு புதிதாக 2,333 உணவகங்கள் திறக்கப்பட்டன, அதில் 1,724 உணவகங்கள் மூடப்பட்டன.

