இரண்டாவது இலவச சமூக சட்ட உதவி நிலையம் உட்லண்ட்சில்

இரண்டாவது இலவச சமூக சட்ட உதவி நிலையம் உட்லண்ட்சில்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Jan 2024 - 11:19 am

1 mins read

தொழில்நுட்ப யுகத்தில் நாம் இருந்தாலும் அந்தத் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தாத, பலன்பெறாத பிரிவினர் இருக்கவே செய்கின்றனர்.

விரல் விட்டு எண்ண முடியாத எண்ணிக்கையில் உள்ள இப்பிரிவினருக்கு உதவியாக சிங்கப்பூரில் இரண்டாவது இலவச சமூக சட்ட நிலையத்தை ‘புரோ போனோ எஸ்ஜி’ உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் திறந்துவைத்தது.

சிங்கப்பூரின் வடமேற்கு வட்டாரத்தில் நடமாடச் சிரமப்படுவோர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சவால்களை எதிர்நோக்குவோர் எளிதில் சட்ட உதவி பெறுவதற்கு உட்லண்ட்ஸ் டிரைவ் 16 புளோக் 547ல் அமைந்துள்ள ‘ரெல்ம் ஆஃப் டிராங்குவிலிட்டி’ அறநிறுவனத்தில் புதிய நிலையம் தொடங்கப்பட்டது.

முதல் நிலையம் ஹவ்காங் வட்டாரத்தின் ‘தியன் டெ’ கோவில் வளாகத்தில் தொடங்கப்பட்டது. குடும்பம், சொத்து, மன ஆற்றல், தனிநபர் காயங்கள் என சுமார் 1,000 வாடிக்கையாளர்களின் சட்ட விவகாரங்களை வெற்றிகரமாகக் கையாள இந்த நிலையம் உதவியுள்ளது.

இந்நிலையில் ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பில் உள்ள சமூக வழக்கறிஞர்கள் மாறி மாறி இரு சட்ட நிலையங்களிலும் ஆலோசனை வழங்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.

நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, ஆண்டுக்கு 1,200 வழக்குகளைப் புதிய நிலையம் கையாளும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

மேலும், சிக்கலான வழக்குகள் தொடர்பில் சட்ட நிபுணர்களும் சமூக சேவையாளர்களும் அணுக்கமாக இணைந்து செயல்பட்டு உதவி வழங்குவர் என்றும் திரு மசகோஸ் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
இலவசம்சட்டம்வழக்குஉட்லண்ட்ஸ்ஆலோசனை