விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பின் பாதுகாப்பு, மீள்திறனை உறுதிசெய்ய செயலூக்கமிக்க அணுகுமுறை அவசியம்: சுன் ஷுவெலிங்

2 mins read
df723df6-d66d-4e98-9bf0-e44cc7a90723
அதிகரிக்கும் விமானப் போக்குவரத்தை கையாள்வதுடன் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த கூடுதல் செயல்பாட்டுத் திறன் அவசியமாகும் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பின் பாதுகாப்பு, மீள்திறன் ஆகியவற்றை உறுதி செய்ய செயலூக்கமிக்க அணுகுமுறை அவசியம் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) தெரிவித்தார்.

மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆசிய பசிபிக் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட திருவாட்டி சுன், ஏறத்தாழ 500 விமானப் போக்குவரத்து நிபுணர்களிடம் பேசினார்.

செயலூக்கமிக்க அணுகுமுறையை மூன்று வழிகளில் நடைமுறைப்படுத்தலாம் என்றார் அவர்.

கடுமையான பாதுகாப்புப் பரிசோதனைகள் அவற்றில் ஒன்று.

இந்த அணுகுமுறையின்கீழ் அபாயங்கள், பிழைகள் ஆகியவை குறித்து புகார் செய்ய விமானப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கப்படும். அத்துடன், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமைத்துவமும் இருக்கும்.

“விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பயணிகளின் நம்பிக்கையைக் கட்டிக்காக்கலாம். விமானத்தில் பாதுகாப்பாகப் பயணம் செய்து தங்கள் அன்புக்குரியவர்களிடம் திரும்பலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும்,” என்று திருவாட்டி சுன் கூறினார்.

ஜூன் 12ஆம் தேதியன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 260 பேர் மாண்டனர்.

ஜூன் 27ஆம் தேதியன்று வியட்னாமின் ஹனோய் நகரில் உள்ள நொய் பாய் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன.

கடந்த ஓர் ஆண்டில் பல விபத்துகளையும் கவலை தரும் சம்பவங்களையும் விமானப் போக்குவரத்துத் துறை சந்தித்திருப்பதை திருவாட்டி சுன் சுட்டினார்.

இந்நிலையில், விமானப் பயணங்களுக்கான தேவை அதிகரிப்பதால் விமானப் போக்குவரத்துக்கான செயல்பாடுகள் மேலும் சவால்மிக்கதாகும் என்றார் அவர்.

அதிகரிக்கும் விமானப் போக்குவரத்தை கையாள்வதுடன் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த கூடுதல் செயல்பாட்டுத் திறன் அவசியமாகும் என்று திருவாட்டி சுன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்