பதின்ம வயது இளையர் ஒருவர்,பதின்ம வயதுச் சிறுமிகள் இருவருடன் இணைந்து சதித்திட்டம் தீட்டி, மிரட்டிப் பணம் பறித்ததற்காக ஜனவரி 10ஆம் தேதி அந்த இளையருக்கு 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ளது.
சதித்திட்டத்தின்படி, பணம் வாங்கிக்கொண்டுச் சிறுமிகள் இருவரும் பாலியல் சேவை வழங்குவதாகக் கூறிய இளையர் அதற்கு விருப்பம் தெரிவித்த ஓர் ஆடவரிடமிருந்து 450 வெள்ளியை மிரட்டிப் பறித்தார்.
மற்றொரு மோசடிச் சம்பவத்தில் அவர், போலியான ‘ஆப்பிள்’ நிறுவன ‘ஏர்பாட்’ எனும் காதொலிக் கருவியை 200 வெள்ளிக்கு விற்றதாகக் கூறப்பட்டது.
குற்றம் செய்த காலகட்டத்தில் அந்த இளையருக்கு வயது 18. சிறுமிகள் இருவரும் 18க்குக் குறைவான வயதுடையவர்கள் என்பதால் மூவரின் பெயர்களை வெளியிட அனுமதியில்லை.
ஜனவரி 10ஆம் தேதி, தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை இளையர் ஒப்புக்கொண்டார். அவற்றில் மோசடி, மிரட்டிப் பணம் பறித்தது போன்றவை தொடர்பான குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ள 18 மாதங்களில், இளையர் அன்றாடம் இரவு 10 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை வெளிப்புறங்களுக்குச் செல்லக்கூடாது. மேலும் 60 மணி நேரம் அவர் சமூக சேவை செய்யவேண்டும்.
மகனின் நன்னடத்தையை உறுதிசெய்யும் வகையில் இளையரின் தாயார் நன்னடத்தை உத்தரவாதத் தொகையாக 5,000 வெள்ளி செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், இளையரும் சிறுமிகள் இருவரும் பணம் ஈட்டுவதற்கான சதித்திட்டம் தீட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
சிறுமிகள் இருவரும் பணத்துக்கு ஈடாகப் பாலியல் சேவை வழங்குவர் என்று ‘டெலிகிராம்’ செயலி மூலம் இளையர் வாடிக்கையாளர்களை அணுகினார். அதற்கு இணங்குவோரை மூவரில் ஒருவர் சந்தித்துப் பணம் பெற்ற பிறகு ஓடிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
அத்தகைய வாடிக்கையாளர் ஒருவர் தனது ஆபாசப் படங்களை அனுப்பியதாகவும் சிறுமிகள் இருவரும் அவரைச் சந்தித்து அப்படங்களைப் பரவலாக அனுப்பப் போவதாக மிரட்டி $450யைப் பறித்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கு முன்பும் அச்சிறுமிகள் இருவரும் பணம் பெற்றுக்கொண்டு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் தொடர்பில் விசாரிக்கப்பட்டதுண்டு. 2024 பிப்ரவரியில் ஒரு சிறுமிக்கு ஆறு மாதம் சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.

