ஒரு தாயும் அவரது பதின்ம வயது மகள்கள் இருவரும் சேர்ந்து 2022ஆம் ஆண்டில் கடைகளிலிருந்து $1,200க்கும் மேல் மதிப்புள்ள பொருள்களைத் திருடியுள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில், அவ்விரு மகள்களுக்கும் வயது 16 மற்றும் 18.
இதற்கிடையே, அந்த மாதின் கணவரும் இளைய மகளும் இணைந்து அதே நாளன்று பேரங்காடி ஒன்றிலிருந்து $200க்கும் மேல் மதிப்புள்ள பொருள்களைத் திருடினர்.
தற்போது 18, 20 வயது நிரம்பிய அவ்விரு மகள்களுக்கும், அக்டோபர் 7ஆம் தேதி, ஆளுக்கு 18 மாதங்கள் நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு விதிக்கப்பட்டது.
தண்டனையின் ஒரு பகுதியாக அவ்விருவரும் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டில் இருக்கவேண்டும். அவர்கள் 50 மணி நேர சமூக சேவையாற்ற வேண்டும்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அக்குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிங்கப்பூரர்களின் பெயர்களையும் வெளியிட முடியாது. குற்றம் நேர்ந்தபோது, மகள்களில் ஒருவருக்கு 16 வயது என்பதே அதற்குக் காரணம்.
18 வயது பூர்த்தியாவதற்கு முன்பு குற்றம் புரிவோர், குழந்தைகள், இளையோர் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுவர்.
முன்னதாக ஜூலை மாதத்தில் நான்கு பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. 57 வயது தந்தைக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனையும், 48 வயது தாயாருக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, பொருள்களைத் திருட தெம்பனிஸ் கடைத்தொகுதிகளில் உள்ள வெவ்வேறு கடைகளுக்கு மகள்கள் இருவரையும் தாயார் அழைத்துச் சென்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கியேரா யூ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.