பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் பொய்யுரைத்த பெண்ணுக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு

1 mins read
8dafb625-62b4-48f8-8b4e-3a05795f83ba
தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் தனக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாக 22 வயது சித்தி ஜுனாய்டா அஸஹார் பொய்யுரைத்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலை நண்பர்கள் இருவருடன் விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்ட 22 வயது சித்தி ஜுனாய்டா அஸஹார், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் பின்னர் காவல்துறையினரிடம் பொய்யுரைத்தார்.

இதன் தொடர்பில் சித்திக்கு டிசம்பர் 13ஆம் தேதியன்று 18 மாத நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தண்டனையின்படி சித்தி இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை வீட்டில் இருக்க வேண்டும். அத்துடன் 60 மணி நேர சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும்.

சித்தியின் நன்னடத்தையை அவரின் தாயார் உறுதிசெய்ய $5,000 பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரியிடம் பொய்த் தகவல் தந்தது தொடர்பில் சித்தி கடந்த செப்டம்பர் மாதம் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

சித்தியுடன் இந்த வழக்கு தொடர்பில் மூன்று ஆண்கள் தொடர்புபடுத்தப்பட்டனர்.

இவர்கள் ஒன்றாக ‘ரெட்மார்ட்’ எனும் மளிகைப்பொருள் விநியோகச் சேவை நிறுவனத்தில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலை செய்தனர்.

அதே ஆண்டில் செப்டம்பர் 6ஆம் தேதியன்று தன்னுடன் வேலை பார்ப்பவர்கள் தனக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்துவிட்டதாக சித்தி அதிகாலை 3.30 மணியளவில் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் பின்னர் மீண்டும் சித்தியிடம் விசாரித்தபோது தான் பொய்யுரைத்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்