சிங்கப்பூர் அரசாங்கத்தின் இணையத்தளம் போன்ற மோசடி இணையத்தளம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் வழங்கும் பல்வேறு திட்டங்கள் அந்தப் போலி இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த மோசடி இணையத்தளத்தைக் கண்டுபிடித்த ‘குரூப்-ஐபி’ இணையப் பாதுகாப்பு நிறுவனம், டிசம்பர் 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அது செயல்படும் விதம் குறித்து விளக்கியிருந்தது.
குறுந்தகவல் மூலம் அரசாங்க ஆதரவு இணையத் தளம் போன்று வடிவமைக்கப்பட்ட போலி இணையத் தளத்துக்கு இணைப்பு அனுப்பப்படும். அதன் மூலம் மோசடி இணையத்தளத்திற்கு செல்பவர்கள் தங்களுடைய சொந்த விவரங்கள், கடன் அட்டை விவரங்களைப் பூர்த்தி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுவர். பின்னர் அரசாங்க மானியம் பெறுவதற்கு வங்கியின் இரண்டு அடுக்கு குறியீடுகளையும் வழங்க வேண்டும் என்று அது தெரிவிக்கும்.
மோசடி இணையத் தளம் டிசம்பர் மத்தியில் தொடங்கப்பட்டிருக்கலாம். இது, இருபதுக்கும் மேற்பட்ட இதர போலி இணையத்தளங்களுடன் செயல்படுகிறது என்று குரூப்-ஐபி குறிப்பிட்டது.
மோசடி இணையத் தளம் குறித்து புகார் செய்யப்பட்டிருப்பதைக் காவல்துறை உறுதி செய்துள்ளது.
இது குறித்து கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் பேச்சாளர் ஒருவர், இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள் குறித்து அறிந்திருப்பதாகவும், மோசடி இணையத்தள விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் திங்கட்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்தார்.

