சிங்கப்பூர், பொருளியல் வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள, உற்பத்தித்திறனை உயர்த்தவேண்டும் என்று வர்த்தக, தொழில் (எரிசக்தி, தொழில்துறை) அமைச்சர் டான் சீ லெங் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலும் பல புதுமையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் சிறியதாகவும் வர்த்தகத்தைச் சார்ந்ததாகவும் இருப்பதுடன், உலகம் மேலும் பிளவுபட்டதாகவும் கணிக்க முடியாததாகவும் மாறி வருவதால் இது அவசியமாகிறது என்றார் டாக்டர் டான்.
“உண்மையான இந்த நிகழ்வுகள் எளிய முடிவைச் சுட்டிக்காட்டுகின்றன: சிங்கப்பூரின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது அதிக நிலத்தைப் பயன்படுத்துவதிலிருந்தோ, கூடுதல் ஊழியர்களைச் சேர்ப்பதிலிருந்தோ அதிகக் கரிமத்தை வெளியிடுவதிலிருந்தோ வரமுடியாது” என்று அவர் சொன்னார்.
“உலகெங்கிலும் தேடுவதன் மூலம், அதாவது தேடி நம்மிடம் உள்ளவற்றிலிருந்து எவ்வாறு அதிக மதிப்பை உருவாக்குவது என்பதிலிருந்தே அது வர வேண்டும்,” என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.
‘வர்த்தக, தொழில் அமைச்சின் பொருளியல் உரையாடல் 2026’ நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
பொருளியல் நிபுணர் சேவை இளநிலை உபகாரச் சம்பள விருதுகளையும் அவர் தகுதிபெற்ற மாணவர்களுக்கு வழங்கினார்.
சிங்கப்பூர் மதிப்புமிக்க அடித்தளத்தைக் கட்டியெழுப்பியுள்ளது; ஆனால் உலகம் மாறும்போது அதுவும் உருமாற வேண்டும் என்று அவர் கூறினார்.
இதற்காக, பொருளியல் உத்திபூர்வ மறுஆய்வைத் தொடங்கியது சிங்கப்பூர். இதன் இறுதி அறிக்கை இவ்வாண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
சிங்கப்பூரின் மதிப்பை வலுப்படுத்தவும் அதன் சுறுசுறுப்பு, தகவமைப்புத் திறன்களை அதிகரிக்கவும் செயல்திறனுடன் சேர்ந்து மீள்தன்மையைக் கட்டியெழுப்பவும் இது முயல்கிறது.
மேற்குத் தீவு
புதிய தலைமுறைத் தொழில்துறைகளுக்கு இடமளிப்பதற்காக மேற்குத் தீவுகள் பலவற்றை ஒன்றிணைக்கும் திட்டங்கள் குறித்து அரசாங்கம் செய்யவேண்டிய செலவு-பயன் பகுப்பாய்வு பற்றி மாணவர் ஒருவர் கேட்டார். அப்பகுதியில் உள்ள பவளப்பாறைகள் 8,000 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த டாக்டர் டான், அப்பகுதியில் எந்தவொரு பணியையும் தொடங்குவதற்கு முன் சிங்கப்பூர் விரிவான சுற்றுச்சூழல் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றார்.
புதிதாக உருவாக்கப்படக்கூடிய மேற்குத் தீவு அணுமின் நிலையங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் உலாவுவதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர், தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்பதைச் சுட்டினார்.


