மாற்றங்களுக்கு இடையிலும் வழக்கறிஞர்கள் தழைத்தோங்க வேண்டும்: தலைமை நீதிபதி

மாற்றங்களுக்கு இடையிலும் வழக்கறிஞர்கள் தழைத்தோங்க வேண்டும்: தலைமை நீதிபதி

2 mins read
25c8a932-1f76-4d8f-b213-4397136cd69a
உச்ச நீதிமன்றம், 321 வழக்கறிஞர்களை அதிகாரபூர்வமாக வழக்கறிஞர் சங்கத்தில் இணைத்துக்கொள்கிறது. அவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதற்குச் சட்டபூர்வ அனுமதியளிக்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 20, 21ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வரவால் சட்டத்துறையின் சூழல்கள் அதிவிரைவாக மாறிவருகின்றன. எனினும், அவற்றின் மத்தியிலும் புதிய வழக்கறிஞர்கள் தழைத்தோங்க வேண்டும் என்றார் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன்.

உச்ச நீதிமன்றம், 321 வழக்கறிஞர்களை அதிகாரபூர்வமாக வழக்கறிஞர் சங்கத்தில் இணைத்துக்கொள்கிறது. அவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதற்குச் சட்டபூர்வ அனுமதியளிக்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் (ஏப்ரல் 20, 21) நடைபெறுகிறது.

அவ்வகையில் திங்கட்கிழமை காலை வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்திடும் புதிய வழக்கறிஞர்களின் மத்தியில் பேசிய தலைமை நீதிபதி, சட்டப் பணிகள் செயல்படுத்தப்படும் முறையில் ‘ஏஐ’  ஏற்படுத்தியுள்ள தாக்கம், இந்த வாழ்க்கைத்தொழிலின் நிலைத்தன்மை சார்ந்த அக்கறைகள் ஆகியவை குறித்துப் பேசினார்.

அரங்கில் கூடியிருந்த புதிய வழக்கறிஞர்களிடையே சில நாள்களுக்குமுன் நடத்தப்பட்ட கருத்தாய்வு ஒன்றின் முடிவுகளைப் பற்றியும் பேசினார் தலைமை நீதிபதி.

‘‘அந்தக் கருத்தாய்வில் பங்கெடுத்தவர்களில் 92 விழுக்காட்டினர் ஏற்கெனவே தங்கள் பணியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்,’’ என்று அவர் சொன்னார்.

எனினும், ‘ஏஐ’ தொழில்நுட்பம் வழக்கறிஞர் தொழில் சார்ந்த செயல்முறைகளை மாற்றினாலும், வழக்கறிஞர்கள் அறநெறி, பொறுப்புணர்வு, மதிநுட்பம் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, தனித்துவமாகத் திகழ்ந்து, இத்தொழிலில் தங்களை மேம்படுத்திட முடியும் என்று கூறினார் திரு சுந்தரேஷ் மேனன்.

மேலும், கருத்தாய்வில் கலந்துகொண்ட மூன்றில் ஒரு பகுதியினர் வேலைப்பளு, மோசமான வேலையிடச்சூழல் போன்ற காரணங்களால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தாங்கள் வழக்கறிஞர் தொழிலை முழுவதுமாக விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாய்க் கூறியிருப்பதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி, சட்டத்துறையின் மாறிவரும் சூழலைத் திறம்படக் கையாளுமாறு புதிய வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொண்டார்.

“இந்தக் காரணங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில், இவற்றால் அதிக தாக்கம் ஏற்படக்கூடும்,’’ என்றார் அவர்.

திறமையானவர்கள் இந்தத் துறைக்கு ஈர்க்கப்படுவார்களா? இதில் நிலைத்திருப்பார்களா? அவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்களா? காலப்போக்கில் அவர்களின் மனநலம் சீராக இருக்குமா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்களை இக்காரணங்கள் தீர்மானிப்பதாக திரு சுந்தரேஷ் மேனன் கூறினார்.

அந்த அடிப்படையில் பார்க்கும்போது, “நாம் எதிர்நோக்கக்கூடிய சவால்கள் வெறும் பொருளியல் ரீதியானவை மட்டுமல்ல. அவை இந்தப் பணியின் தரம், நேர்மை, நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றையும் சார்ந்தவை,’’ என்று கூறினார் தலைமை நீதிபதி.

வேலைப்பளு, தொழில் வணிகமயமாக்கல் தொடர்பான அக்கறைகளால் பல இளம் வழக்கறிஞர்கள் இத்தொழிலைவிட்டு வெளியேற எண்ணுவதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்தச் சவால்களை நாம் நேரடியாக எதிர்கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை வழக்கறிஞர்களுக்கு இது ஒரு நிறைவான, நிலையான வாழ்க்கைத்தொழிலாக இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும்,” என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

குறிப்புச் சொற்கள்