சிங்கப்பூரின் ஓசிபிசி வங்கி மூன்றாம் காலாண்டில் அதிக லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) அதன் பங்குகள் 4.4 விழுக்காடு வரை உயர்ந்தன.
அந்த உயர்வின் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் ஒரு பங்கின் விலை $17.94 என உச்சத்தைத் தொட்டது. ஓராண்டைக் குறிக்கும் 52 வாரத்தில் இதுவே ஆக அதிகம்.
முந்தைய நாள் வர்த்தகத்தில் ஓசிபிசி வங்கி பங்கின் விலை $17.19 என முடிவடைந்தது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் அந்த வங்கி $1.98 பில்லியன் நிகர லாபம் ஈட்டியது.
முன்னதாக, லாபம் $1.79 பில்லியனாக இருக்கும் என புளூம்பெர்க் ஆய்வில் கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பைக் கடந்து வங்கி அதிக லாபத்தைப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வட்டி சாராத வருவாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்தது லாப உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று ஓசிபிசி வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்தது.
ஆயினும், வங்கியின் நிகர வட்டி வருவாய் 9 விழுக்காடு சரிந்து $2.23 பில்லியனைத் தொட்டது. வட்டி விகிதச் சூழல் மெதுவடைந்து வருவதை அது காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டிலும் கிட்டத்தட்ட இதே லாபத்தை அந்த வங்கி ஈட்டி இருந்தது. 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை அதன் நிகர லாபம் $1.97 பில்லியன் என்று கடந்த ஆண்டு அந்த வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டும் லாப வளர்ச்சி விகிதம் தொடர்ந்ததற்கான காரணங்களை வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹெலன் வோங் விளக்கினார்.
“உலக வர்த்தகமும் பெரிய பொருளியல் நாடுகளும் மீள்திறனுக்கான அறிகுறியை வெளிப்படுத்தி உள்ளன.
“வர்த்தக வளர்ச்சியும் மேல்நோக்கிய தொழில்நுட்ப வசதிகளும் இவ்வாண்டு வங்கி வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளன. குறிப்பாக, ஆசியாவுக்கு அவை நன்மை பயக்கின்றன.
“2026ஆம் ஆண்டின் வர்த்தகச் செயல்பாட்டு நிலவரங்கள் சிக்கலானவையாகத் தோன்றுகின்றன. பல்வேறு நாடுகளின் பொருளியல் வளர்ச்சி மெதுவடையும் சாத்தியம் உள்ளது. அதற்கேற்ப, வர்த்தகக் கொள்கைகளும் மாறுபடும்.
“புவிசார் அரசியல் பதற்றங்கள் இன்னும் நீடிப்பதால் நமது முக்கியச் சந்தைகளுக்கான விநியோகத் தொடரின் தேவை மற்றும் விநியோகத்தில் அவை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
“இருப்பினும், வங்கியின் அடிப்படைக் கூறுகள் உறுதியான மீட்சியை உணர்த்துகின்றன. எனவே, இடைக்காலம் முதல் நீண்டகாலம் வரையிலான வளர்ச்சிக்குரிய வாய்ப்புகளை எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

