புதிய கூட்டுரிமை வீடுகளை வாங்கி ‘சப்சேல்ஸ்’ மூலம் கொள்ளை லாபம் ஈட்டியோர் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் அதிகரித்தது.
‘சப்சேல்ஸ்’ என்பது புதிய கூட்டுரிமை வீட்டை வாங்கி அதன் பரிவர்த்தனை முழுமையடைந்து சாவி கிடைப்பதற்கு முன்பே அதை வேறொருவருக்குக் கைமாற்றிவிடுவதாகும்.
இந்நிலையில், ‘சப்சேல்ஸ்’ மூலம் 2024ஆம் ஆண்டில் வீடுகளை விற்றவர்கள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சராசரியாக $270,000 லாபம் ஈட்டியதாக ஆரஞ்சுடீ சொத்து முகவை தெரிவித்தது.
வழக்கமாக, புதிய கூட்டுரிமை வீடுகளின் பரிவர்த்தனைகள் முழுமையடைந்து சாவி கிடைக்க மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் எடுக்கும்.
ஆனால், கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக கூட்டுரிமை வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் தடைப்பட்டன.
இதனால் அவை தொடர்பான பரிவர்த்தனைகள் முழுமையடைய வழக்கத்தைவிட கூடுதல் ஆண்டுகள் எடுத்தன.
இதன் விளைவாக, ‘சப்சேல்ஸ்’ மூலம் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட அடுக்குமாடி தனியார் வீடுகளில் 6.6 விழுக்காடு வீடுகள் ‘சப்சேல்ஸ்’ மூலம் விற்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாறு மொத்தம் 1,306 வீடுகள் ‘சப்சேல்ஸ்’ மூலம் விற்கப்பட்டன.
2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 178 மட்டுமே என்று ஆரஞ்சு டீ நிறுவனம் கூறியது.
இருப்பினும், 2007ஆம் ஆண்டில் பதிவான ‘சப்சேல்ஸ்’ எண்ணிக்கை எட்டப்பட்டவில்லை என்று பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர்.
அந்த ஆண்டில் ‘சப்சேல்ஸ் மூலம்’ முன் இல்லாத அளவுக்கு 4,863 வீடுகள் விற்கப்பட்டன.
‘சப்சேல்ஸ்’ வீட்டு விற்பனை தொடர்பான தரவுகளைப் பதிவு செய்யும் முறை 1996ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது.
‘சப்சேல்ஸ்’ மூலம் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 2007ஆம் ஆண்டில் விற்கப்பட்ட வீடுகள்தான் இதுவரை ஆக அதிகமானது.

