தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீடித்த நிலைத்தன்மையில் இளையர்களின் ஆர்வத்தைத் தூண்டிய திட்டம்

2 mins read
b83e91c3-5375-4c85-a54a-e33927aa38a3
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கிரேஸ் ஃபூ. - படம்: சாவ் பாவ்

தற்போதைய பொருளியல் சூழலில் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பான பதற்றம் நிலவுவதாகவும் அதனால் ஒன்றிணைந்து செயல்படாமல் பல நாடுகள் விலகிப் போவதாகவும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.

இதனால் நீடித்த நிலைத்தன்மை சார்ந்த மேம்பாட்டுக்குத் தடை ஏற்படக்கூடும் என்று கூறிய அமைச்சர் ஃபூ, எல்லை தாண்டிய ஒத்துழைப்பு தடுமாறும்போதும், விநியோகத் தொடர் முறியும்போதும், பசுமைத் தொழில்நுட்பத்தின் விலையும் அதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மையும் பாதிக்கப்படும் என்றார்.

வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திருவாட்டி ஃபூ, இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் நீடித்த நிலைத்தன்மை மிக்க சூழலை உருவாக்க ஒன்றிணைய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மைக்கான இளைய தலைவர்கள் திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் திருவாட்டி ஃபூ.

வெள்ளிக்கிழமை (20 ஜூன்) காலை, ஃபூனான் கடைத்தொகுதியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சருடன் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யானும் கலந்துகொண்டார்.

நிறைவு நிகழ்ச்சியில் விருது பெற்றுக்கொண்ட மாணவர்கள் 34 பேரைப் பாராட்டிய அமைச்சர் ஃபூ, நீடித்த நிலைத்தன்மை என்பது வெறும் சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் சிங்கப்பூரின் நீண்டகால வாழ்வை உறுதிசெய்வதுமாகும் என்று வலியுறுத்தினார்.

“அரசாங்கமும், நிறுவனங்களும் பங்களித்தாலும் இளையர்களின் பங்கு மிக முக்கியம். ஒரு சமூகமாக இணைந்து, புத்தாக்கச் சிந்தனையுடன் மாற்றம் கொண்டு வரவேண்டும்,” என்றார் அவர்.

ஈராண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான இத்திட்டம் சுற்றுப்புற விவகாரங்களின் மீது இளையர்களின் நாட்டத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இதன் மூலம் தேசியச் சுற்றுப்புற வாரியம் இதர அமைப்புகளுடனும் பங்காளிகளுடனும் கைகோத்து தூய்மையான சிங்கப்பூருக்கு வழியமைக்க இளையர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளை வழங்கின.

நீடித்த நிலைத்தன்மை தொடர்பான சவால்களை முறியடிக்கும் விதமாக மாணவர்கள் மொத்தம் 16 திட்டங்களில் ஈடுபட்டனர்.

அவர்களில் ஒருவர் நாதிரா ஃபத்தீன் சபீல், 21. சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயிலும் அவர் உணவு நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் திட்டத்தில் ஈடுபட்டார்.

மாணவி நாதிரா ஃபத்தீன் சபீல்.
மாணவி நாதிரா ஃபத்தீன் சபீல். - படம்: அனுஷா செல்வமணி

இத்திட்டத்தில் தனியாக ஈடுபட்ட நாதிரா உணவு வீணாவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

உணவுக் கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவது, வீட்டிலேயே உணவை எவ்வாறு உரமாக்குவது போன்றவற்றைப் பயிலரங்கு மூலம் பிறரிடம் கொண்டுசேர்ப்பது இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்.

சமூக ஊடகத் திட்ட ஆதரவோடு அத்திட்டம் 200க்கும் மேற்பட்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் சென்றடைந்தது.

“மனிதவளத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டாலும் இத்திட்டம் நீடித்த நிலைத்தன்மை மீதான ஆர்வத்தைக் கூட்டியுள்ளது. இதன் மூலம் பல திறன்களைக் கற்றுக்கொண்டேன்,” என்றார் நாதிரா.

நிறைவு விழா, மூன்றாவது சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மைக்கான இளைய தலைவர்களின் பொறுப்பு தொடங்குவதையும் குறித்தது.

இம்மாதம் 25ஆம் தேதியிலிருந்து அதில் 37 மாணவர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.

மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (22 ஜூன்) வரை ஃபூனான் கடைத்தொகுதியில் இதையொட்டிய நிகழ்ச்சிக்கு முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘யெஸ் ஃபெஸ்ட்’ நிகழ்ச்சியில் பொதுமக்கள் மாணவர்கள் நடத்தும் பயிலரங்குகளில் கலந்துகொள்ளலாம். மேல்விவரங்களுக்கு go.gov.sg/yesfestsg2025 இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்