உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டத்தில் பங்கேற்றதையடுத்து, தாதிமை இல்லங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 300 பேருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படும் சம்பவங்கள் குறைந்துள்ளன.
அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல நேரிட்ட சம்பவங்களும் குறைந்தன. திட்டத்தின்கீழ் தாதிமை இல்லங்களிலேயே அவர்களுக்குப் பராமரிப்புச் சேவை வழங்கப்பட்டது இதற்குக் காரணமாகும்.
குறிப்பிடத்தக்க மாற்றம்
கூடுதலான மூத்தோரைப் பலனடையச் செய்யும் நோக்கில் தற்போது உட்லண்ட்சில் உள்ள ரென் சி தாதிமை இல்லத்தில் மட்டும் செயல்பாட்டில் இருக்கும் இத்திட்டத்தை அவ்வட்டாரத்தில் உள்ள மற்ற தாதிமை இல்லங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து உட்லண்ட்ஸ் மருத்துவமனை ஆலோசித்துவருகிறது. இதனால் திடீரென்று நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை நாடுவதும் மூன்றில் ஒரு பங்கு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
‘திரைவ்’ எனப்படும் அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மூத்தோரிடையே சுகாதாரத்தையும் மீள்திறனையும் உருமாற்றும் திட்டத்தின்கீழ் மூத்தோருக்குத் தேவையான நிபுணத்துவ மருத்துவப் பராமரிப்புச் சேவைகள் தாதிமை இல்லத்திலேயே வழங்கப்படுகின்றன.
உட்லண்ட்சில் உள்ள ரென் சி தாதிமை இல்லம் 2024ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதற்கு முன்பு, அடிப்படையாக 12 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவை உட்லண்ட்ஸ் மருத்துவமனையும் ரென் சியும் அமைத்தன.
இருதரப்பும் ஒத்துழைப்பது குறித்து அந்தச் செயற்குழு வாரந்தோறும் சந்திப்புகளை நடத்தியது. பிறகு நோயாளிகளைப் பராமரிப்பது குறித்துச் சந்திப்புகள் நடத்தப்பட்டன.
ஒத்துழைப்பு
தங்கள் தாதிமை இல்லத்தில் வசிப்போரின் சுகாதாரத் தகவல்களை ஒன்றுசேர்த்து ரென் சி, உட்லண்ட்ஸ் மருத்துவமனையிடம் சமர்ப்பிக்கும். அத்தகவல்களை உட்லண்ட்ஸ் மருத்துவமனை ஆராயும்.
பிரச்சினைகளையும் சிக்கலான சுகாதாரத் தேவைகளையும் ஆக்ககரமான முறையில் கையாள்வதற்கான வழிமுறைகளைப் பற்றிக் கலந்துபேசுவது இந்நடவடிக்கையின் நோக்கமாகும். எடுத்துக்காட்டாக, மறதிநோய் போன்ற பிரச்சினைகளால் நோயாளிகள் செயல்படும் விதத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் கையாள்வது குறித்து கலந்தாலோசிக்கப்படும்.
அதுபோன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குவோரை மேலும் நன்கு கையாள்வதற்குத் தாதிமை இல்லப் பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அத்தகைய நோயாளிகள் நடந்துகொள்ளும் விதத்துக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் பணியாளர்களால் அடையாளம் காண முடிகிறது.
திரைவ், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சோதனையிடப்பட்டது. அதன் மூலம் ரென் சி தாதிமை இல்லவாசிகள் கிட்டத்தட்ட 300 பேர் பலனடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

