தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எலும்பு மஜ்ஜை தானம் குறித்து விழிப்புணர்வூட்ட பெருமுயற்சி

2 mins read
32d04244-bdf9-4bca-b771-11fc5bd06bdd
‘மேட்ச் ஃபார் லைஃப்’ சாலைக்‌ காட்சியில் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளராகப் பொதுமக்‌கள் பதிவுசெய்துகொண்டனர். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 4

எலும்பு மஜ்ஜை தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் (Bone Marrow Donor Programme), ‘மேட்ச் ஃபார் லைஃப்’ (Match for Life) சாலைக்‌ காட்சி‌யை நவம்பர் 9, 10 தேதிகளில் நமது தெம்பனிஸ் நடுவத்தில் நடத்தியது.

சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எலும்பு மஜ்ஜை தானம் தொடர்பான பொது அணுகுமுறைகள் குறித்த அதன் முதல் தேசிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டன.

இவ்வாண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடந்த அந்த ஆய்வில் ஏறத்தாழ 3,000 பேர் பங்கேற்றனர்.

“ரத்தம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளிக்கும் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டத்தின் தொலைநோக்கை நிறைவேற்ற, சமுதாயத்தில் அனைவரின் முயற்சியும் தேவைப்படுகிறது. நாம் ஒன்றுபட்டால் மேலும் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்,” என்று நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான தகவல், மின்னிலக்க மேம்பாடு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தமது வரவேற்புரையில் வலியுறுத்தினார்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 46 விழுக்காட்டினர் ஊசிகளைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்றும் அதனால் 44 விழுக்காட்டினர் தானம் செய்யத் தயங்குகின்றனர் என்றும் தெரியவந்ததாக எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டத்தின் தலைமை இயக்க அதிகாரி ரவிந்திரன் நாகலிங்கம், 58, கூறினார்.

“பெரும்பாலான மூல உயிரணு (Stem cell) தானங்கள் எலும்பு மஜ்ஜையைப் பிரித்தெடுக்காமல் ரத்த மாற்றம் போன்ற செயல்முறையின் மூலம் செய்யப்படுகின்றன,” என்றார் அவர்.

அத்துடன், பங்கேற்ற மூவரில் ஒருவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே தானம் அளிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டதும், சிலர் தானம் அளிப்பதற்கு முன்பு ஊக்கத்தொகை பெற விருப்பம் தெரிவித்ததாகவும் திரு ரவிந்திரன் கூறினார்.

இதுபோன்ற தவறான கருத்துகளை மாற்ற, மஜ்ஜை நன்கொடை அளிப்பது மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் ஒரு தன்னலமற்ற செயல் என்பதை வலியுறுத்தும் கல்வி அவசியம் வேண்டும் என்றும் அதனை நோக்கி தங்களின் அமைப்பு செயல்படுகிறது என்றும் அவர் சொன்னார்.

“எலும்பு மஜ்ஜை நன்கொடைக்குப் பதிவுசெய்துள்ள சிங்கப்பூர் இந்தியர்களின் விகிதம் மிகக் குறைவு. உள்ளூரில் பொருத்தமான இந்திய நன்கொடையாளரைக் கண்டறிவதற்கான வாய்ப்பு 2% மட்டுமே உள்ளது.

“பொருத்தமான நன்கொடையாளரைத் தேர்ந்தெடுக்க எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் அனைத்துலகப் பதிவேடுகளை அணுக முடியும் என்றாலும், அது விலை உயர்ந்ததாக இருக்கும் என்பதால் மேலும் நிறைய சிங்கப்பூரர்கள் நன்கொடை அளிக்க முன்வந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார் திரு ரவிந்திரன்.

நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக மஜ்ஜை நன்கொடையாளர்கள், நன்கொடையின் மூலம் குணமடைந்தவர்கள், தொண்டூழியர்கள், பணியாளர்களின் கதைகளைத் தொகுத்து ‘சேவிங் லைவ்ஸ் டுகெதர்’ (Saving Lives Together) என்ற தலைப்பில் புதிய நூலையும் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்