தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய வெற்றிகளுக்காகப் பழைய களத்தில் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி

3 mins read
5784edf5-6fdd-4d0f-b305-2ef4cd5f37c2
வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் களமிறங்கவுள்ள சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணியினரில் அக்கட்சியின் மூன்று தலைவர்கள் (முன்வரிசை இடமிருந்து) லியோங் மன் வாய், டாக்டர் டான் செங் போக், ஹேசல் புவா ஆகியோர் இடம்பெறுகின்றனர். புதுமுகங்களான (பின்வரிசை இடமிருந்து) சானி இஸ்மாயில், சுமார்லெகி அம்ஜா இருவரும் மற்ற வேட்பாளர்கள். - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி) அதன் கட்சித் தலைவர்களைப் புதிய வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் களமிறக்கவுள்ளது.

இரண்டாம் முறையாகக் கட்சித் தலைவர் டாக்டர் டான் செங் போக், 84, தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய், 65, முதலாம் துணைத் தலைவர் ஹேசல் புவா, 54, ஆகியோர் அக்குழுத்தொகுதியில் போட்டியிடுவர்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நூலிழையில் மக்கள் செயல் கட்சியிடம் (மசெக) தோற்ற பிஎஸ்பி அணியிலும் அவர்கள் இருந்தனர். அப்போது மசெக 51.68 % வாக்குகளைப் பெற்றது. பிஎஸ்பி 48.32% வாக்குகளைப் பெற்றது.

“எங்களை நாடாளுமன்றத்திற்குக் கொண்டுசென்றது வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி வேட்பாளர்களே. அதனால் குடியிருப்பாளர்களுக்கு நன்றிகூற நாங்கள் மூவரும் மீண்டும் இங்குக் களமிறங்குகிறோம்,” என்றார் திரு லியோங்.

அவர்களுடன் கட்சிப் புதுமுகங்களான நிறுவனச் சட்ட ஆலோசகர் சானி இஸ்மாயில், 49, முன்னாள் பாட்டாளிக் கட்சித் தொண்டர் சுமார்லெகி அம்ஜா, 53, ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

Watch on YouTube

தொழிலாளர் நலம், வேலை உருவாக்கம், திருமணச் சவால்களைக் குறிவைக்கும் சானி இஸ்மாயில்

திரு இஸ்மாயில் 1996ஆம் ஆண்டு சட்டப் படிப்பை மேற்கொள்ள இங்கிலாந்து சென்றார். பிறகு 2013ல் சிங்கப்பூருக்குத் திரும்பி, இங்கு நிறுவனச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார்.

Watch on YouTube

தற்போது டிசோலோ அனைத்துலக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் இஸ்மாயில் ‘பிஎஸ்பி’ தன் தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ள தொழிலாளர் சார்ந்த கொள்கைகளுக்குக் குரல்கொடுக்க விரும்புகிறார்.

“சிங்கப்பூரில் குறைந்தபட்ச சம்பளத்துடனான வருடாந்தர வேலைவிடுப்பை 7 நாள்களிலிருந்து 14 நாள்களாக அதிகரிப்பது, குறைந்தபட்ச வருவாயைச் சட்டபூர்வமாக அமலாக்குவது, கூடுதலான மூன்று பொது விடுமுறை நாள்களை (தைப்பூசம், சீனப் புத்தாண்டுக்கு முன்தினம், நோன்புப் பெருநாளுக்கு மறுநாள்) அறிமுகப்படுத்துவது போன்ற எங்கள் திட்டங்கள் தொழிலாளர் நலனுக்குக் கைகொடுக்கும்,” என்றார் திரு இஸ்மாயில்.

தாமான் ஜூரோங் சந்தை, உணவு நிலையத்தில் மக்களைச் சந்திக்கும் சானி இஸ்மாயில், 49.
தாமான் ஜூரோங் சந்தை, உணவு நிலையத்தில் மக்களைச் சந்திக்கும் சானி இஸ்மாயில், 49. - படம்: ரவி சிங்காரம்

“சிங்கப்பூரர்களிடையே தொழில்முனைப்புச் சிந்தனையை அதிகப்படுத்த விரும்புகிறேன்.

இந்தக் குழுத்தொகுதிக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகளைக் கொண்டுவர விரும்புகிறேன். வேலை-வாழ்க்கைச் சமநிலை முக்கியம். வீட்டின் அருகிலேயே வேலை இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிப் புதுமுக வேட்பாளர் சானி இஸ்மாயில், 49.

“என் மனைவி போலந்து நாட்டைச் சேர்ந்தவர். சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட மூவரில் ஒருவர் என்னைப்போல வேறு நாட்டின் குடிமக்களைத் திருமணம் செய்கின்றனர். அவர்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண விரும்புகிறேன்,” என்றார் அவர்.

“என் நிறுவனம் கூட்டுரிமை வீட்டு நிர்வாகத்தைச் சார்ந்தது. அத்திறன்களை நகர நிர்வாகத்துக்கும் கொண்டுவருவேன். என் சட்டப் பின்னணி, நாடாளுமன்றத்தில் கடினமான கேள்விகளை எழுப்பக் கைகொடுக்கும்,” என்றும் அவர் கூறினார்.

தாமான் ஜூரோங் சந்தை, உணவு நிலையத்தில் மக்களைச் சந்திக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக் குழுவினர்.
தாமான் ஜூரோங் சந்தை, உணவு நிலையத்தில் மக்களைச் சந்திக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக் குழுவினர். - படம்: ரவி சிங்காரம்

வாழ்க்கைச் செலவினங்கள், பொருளியல் சமமின்மையை எதிர்க்கும் அம்ஜா

திரு அம்ஜா, 53, உணவு, பான நிறுவனமான ‘டெல் மோண்ட் பசிபிக்’கின் வர்த்தக மேம்பாட்டு, பதப்படுத்தப்பட்ட உணவுப் பிரிவுகளின் தலைவராவார். இங்கிலாந்தில் வர்த்தக நிர்வாக முதுநிலைப் பட்டம் பெற்ற அவர் ஒற்றைப் பெற்றோராக ஒரு மகனைப் பேணுகிறார். சிலாட் விளையாட்டு நிபுணரான அவர், சிங்கப்பூர் சிலாட் சம்மேளனத்தில் 1990கள் முதல் 2000கள் வரை பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றினார்.

“உயரும் வாழ்க்கைச் செலவினங்களின் சுமையைத் தாங்கும் நடுத்தர வருமானத்தினர் உட்பட, சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கும் கொள்கைகளை வகுக்க விரும்புகிறேன்,” என்றார் அவர்.

இந்த அணி, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஹமீது ரசாக், திரு ஆங் வெய் நெங், திருவாட்டி கசேண்ட்ரா லீ, திரு ஷான் ஹுவாங் ஆகியோர் உள்ளிட்ட மசெக அணியுடன் இம்முறை ப் போட்டியிடவுள்ளது.

குறிப்புச் சொற்கள்