படிப்படியாக உயரும் சம்பளமுறை: வெளிப்பணி ஊழியர்களின் ஆண்டுவிடுப்பு அதிகரிப்பு

படிப்படியாக உயரும் சம்பளமுறை: வெளிப்பணி ஊழியர்களின் ஆண்டுவிடுப்பு அதிகரிப்பு

3 mins read
2029 முதல் கட்டங்கட்டமாக நடப்புக்கு வரும்
4a1b90a3-5512-4c32-998b-fd12a94106ae
மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மூலம் பணியமர்த்தப்படும் வெளிப்பணி ஊழியர்களுக்கு (outsourced workers) 2029லிருந்து, குறைந்தபட்ச ஆண்டுவிடுப்பு 7 நாள்களிலிருந்து 10 நாள்களாகப் படிப்படியாக உயர்த்தப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் வரும் வெளிப்பணி ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஆண்டு விடுப்புத் தகுதி ஏழு நாள்களிலிருந்து 10 நாள்களாக உயர்த்தப்படும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

2029ஆம் ஆண்டு முதல் இந்த மாற்றம் படிப்படியாக அமலுக்குவரும் என்று அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) தெரிவித்தது.

மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள் மூலம் ஓரிடத்தில் வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள் வெளிப்பணி ஊழியர்கள் (Outsourced workers) எனப்படுவர்.

முத்தரப்புப் பங்காளிகளுடன் கலந்தாலோசித்த பிறகு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, ஐந்து முக்கியத் துறைகளைச் சேர்ந்த வெளிப்பணி ஊழியர்களுக்கு ஆதரவாக அமையும்.

துப்புரவு, பாதுகாவல், நிலவனப்பு, மின்தூக்கி மற்றும் நகரும் மின்படிக்கட்டு, கழிவு நிர்வாகம் ஆகியவை அந்தத் துறைகள்.

அவற்றில் பணிபுரியும் இத்தகைய ஊழியர்களில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் இந்த விடுப்பு உயர்வின் மூலம் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

தற்போதைய நிலவரப்படி, வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் இந்த ஊழியர்கள் வேலையில் சேர்ந்த முதல் ஆண்டில் குறைந்தபட்சம் ஏழு நாள்கள் ஆண்டுவிடுப்பு பெறத் தகுதி உடையவர்கள். இது, அதே நிறுவனத்தில் பணியிலிருக்கும் ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு நாள் வீதம் அதிகரித்து, அதிகபட்சமாக 14 நாள்கள் வரை உயரும்.

ஆனால், வெளிப்பணி ஊழியர்களுக்கு இந்த விடுப்புப் பயன்கள் பொருந்தாமல் போகக்கூடும் என்பதை அமைச்சு சுட்டியது.

எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தின் சேவை ஒப்பந்தம் மற்றொரு நிறுவனத்திடம் மாறும்போது, அதே பணியிடத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் வேலை செய்திருந்தாலும், புதிய நிறுவனத்தின்கீழ் ஊழியர்களின் விடுப்புத் தகுதி மீண்டும் ஆரம்ப நிலையான ஏழு நாள்களுக்கே மாற்றப்பட்டு விடுகிறது. இதனால், அவர்களின் பல ஆண்டுச் சேவை கணக்கில் கொள்ளப்படாமல் போகிறது.

இந்த நிலையை மாற்றி, ஊழியர்களின் தொடர் சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் முதலாளிகள் மாறினாலும் அவர்களின் வேலைவாய்ப்பு நிலைமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவும் முத்தரப்புப் பங்காளிகள் ஆண்டுவிடுப்பு உயர்வுக்குச் சம்மதித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது, தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளரும் ராடின் மாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மெல்வின் யோங் இதன் தொடர்பிலான கோரிக்கையை முன்வைத்தார்.

ஒப்பந்தங்கள் மாறும்போது ஊழியர்களின் விடுப்பு நாள்கள் மீண்டும் ஏழு நாள்களாகக் குறைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், “அடிப்படை விடுப்பு நாள்களை 10 நாள்களாக உயர்த்துவதன் மூலம், ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் அவர்களின் சேவையை அங்கீகரிக்கவும் முடியும். இது, இந்தத் துறைகளில் பணியாளர்களின் நிலைத்தன்மையை மேம்படுத்தும்,” என்று எடுத்துரைத்தார்.

வணிக நிறுவனங்கள் இந்த மாற்றத்திற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளப் போதிய அவகாசம் அளிக்கும் வகையில், ஆண்டுவிடுப்பு உயர்வு 2029ஆம் ஆண்டு முதல் படிப்படியாக நடைமுறைக்கு வரவிருக்கிறது.

இதற்கான குறிப்பிட்ட காலக்கெடு குறித்து அந்தந்தத் துறை சார்ந்த முத்தரப்புக் குழுக்கள் மேலும் விவாதிக்கும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய குறைந்தபட்ச விடுப்புத் தகுதி, வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் ஊழியர்கள் தற்போதும் பெற்றுவரும் ஆண்டு விடுப்பு உயர்வைப் பாதிக்காது என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கெனவே 10 நாள்களுக்கும் மேலாக விடுப்புக்குத் தகுதிபெறும் ஊழியர்கள் தொடர்ந்து அந்தப் பயன்களைப் பெறுவர்.

குறிப்புச் சொற்கள்
சம்பளம்விடுப்புமனிதவள அமைச்சு