தேர்தல் நேரத்தில் திரித்து வெளியிடப்படும் தகவல்களைத் தடுக்க மசோதா

தேர்தல் நேரத்தில் திரித்து வெளியிடப்படும் தகவல்களைத் தடுக்க மசோதா

2 mins read
af0871c3-b68b-466f-a2d6-4406be8855f5
வேட்பாளர் சொல்லாத, செய்யாத ஒன்றை அவர் சொன்னதாக, செய்தததாக சித்திரித்து இணையத்தில் வெளியிடப்படும் தகவல்களை புதிய நடவடிக்கை தடுக்கும். - கோப்பு படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேர்தலின்போது மின்னிலக்க ரீதியாக திரித்து வெளியிடப்படும் தகவல்களைக் கையாள்வதற்கான நடவடிக்கையை அறிமுகம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இணைய விளம்பர ஒருங்கிணைப்பு என்னும் தேர்தல் திருத்த மசோதாவை விவாதத்திற்கு தாக்கல் செய்து தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பேசினார்.

நாடாளுமன்றத் தேர்தல் சட்டம் மற்றும் அதிபர் தேர்தல் சட்டம் ஆகியவற்றின்கீழ் இயற்றப்பட்டுள்ள சிங்கப்பூரின் தேர்தல் சட்டத்தை அங்கீகரிக்கும் விதமாக கவனத்துடன் மசோதா திருத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

வேட்பாளர் சொல்லாத, செய்யாத ஒன்றை அவர் சொன்னதாக, செய்தததாக திரித்து வெளியிடப்படும் இணையத் தகவல்களை புதிய நடவடிக்கை தடுக்கும்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியோ ஃபோட்டோஷாப் போன்ற செயற்கை நுண்ணறிவற்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியோ உருவாக்கப்படும் பொய்யான தகவல்கள், டீப் ஃபேக் எனப்படும் வன்போலிகள் போன்றவை அதில் அடங்கும்.

தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் அதுபோன்ற தகவல்கள் சட்டவிரோதமானவையாகக் கருதப்படும்.

தங்களைத் தவறாக விமர்சிக்கும் தகவல்களை மறுஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட தகவல்களை வெளியிட்டோருக்கு எதிராக திருத்த நடவடிக்கைக்கான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு தேர்தல் அதிகாரியை, பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் கேட்டுக்கொள்ளவும் புதிய நடவடிக்கை வழிவகை செய்யும்.

திருத்த நடவடிக்கை என்பது, தேர்தல் நேரத்தில் தவறாக வெளியிடப்படும் தகவல்களை நீக்குவது, அதுபோன்ற தகவல்களை சிங்கப்பூர் பயனாளர்கள் அணுகாத வகையில் முடக்குவது போன்றவை அடங்கும்.

அதற்கு இணங்க மறுக்கும் சமூக ஊடகச் சேவைகளுக்கு $1 மில்லியன் வரையிலான அபராதமும் அதில் சம்பந்தப்பட்ட மற்ற அனைவருக்கும் $1,000 வரையிலான அபராதமும் ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்க திருத்த மசோதா அனுமதிக்கும்.

குறிப்புச் சொற்கள்
தேர்தல்பொதுத் தேர்தல்பொய்ச் செய்தி