ஒற்றைத் தாய்மாரைக் கொண்டாடிய ‘புரோஜெக்ட் அதீனா’ நிகழ்ச்சி

ஒற்றைத் தாய்மாரைக் கொண்டாடிய ‘புரோஜெக்ட் அதீனா’ நிகழ்ச்சி

2 mins read
0c7b68a9-ce51-4d65-8427-85db44dd4757
சிண்டாவின் அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் ஒற்றைத் தாய்மாரும் அவர்களின் பிள்ளைகளும் ஒன்றுகூடிப் பல விளையாட்டுகளில் ஈடுபட்டனர். - படம்: கிறிஸ்டோ லியோன்
multi-img1 of 2

பரபரப்பான வாழ்க்கைமுறை. வீட்டையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு. நிதிச்சுமை. இப்படிப்பட்ட சவால்களைக் கடந்துசெல்லும் ஒற்றைப் பெற்றோரில் 46 வயது திருவாட்டி ஷாமளா மாசிலாமணியும் ஒருவர்.

“ஒற்றைப் பெற்றோராக வாழ்க்கைப் போராட்டத்தைச் சந்திக்க மனத்தளவில் எப்போதும் வலிமையாக இருப்பேன். ஆனால், சில நேரங்களில் எனக்குள் இருக்கும் மென்மையான, அன்பான குணங்களை மறந்துவிட்டேனோ எனத் தோன்றும்,” என்று ‌‌‌அவர் கூறினார்.

அவரைப் போன்ற தாய்மாருக்குப் புதுத் தெம்பளித்தது அண்மையில் நடந்த அன்னையர் தினக் கொண்டாட்டம்.

திருவாட்டி ஷாமளா போன்ற கணவரின் துணையின்றி வாழும் தாய்மாரின் அன்னையர் தினக் கொண்டாட்டத்தை இவ்வாண்டு சிண்டாவின் ‘புரோஜெக்ட் அதீனா’ திட்டம் மெருகேற்றியது. அதில் கிட்டத்தட்ட 80 தாய்மாரும் அவர்களின் பிள்ளைகளும் கலந்துகொண்டனர்.

ஏறக்குறைய 17 ஆண்டுகளாக அன்னையர் தினத்தைக் கொண்டாடிவரும் ‘புரோஜெக்ட் அதீனா’, முதன்முறையாக இரண்டு நாள் அனுபவத்தைத் தாய்மாருக்குக் கொடுத்தது.

தங்களைப் போன்ற ஒற்றைப் பெற்றோருடன் கொலுகோ முகாமில் ஓர் இரவு முழுதும் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிள்ளைகளுடன் அன்னையர் ஈடுபட்டனர். மே 23, 24ஆம் தேதிகளில் முகாம் நடந்தது.

மண்டாய் வனவிலங்குப் பூங்கா, சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், நைட் சஃபாரி, ரிவர் வொண்டர்ஸ் ஆகியவற்றுக்கான சுற்றுலாக்கள் தாய்மாருக்கும் பிள்ளைகளுக்கும் கூடுதல் உற்சாகமளித்தன. அவற்றைச் சுற்றிப்பார்த்ததோடு பிற தாய்மார், பிள்ளைகளுடன் பல விளையாட்டுகளில் கலந்துகொண்டனர்.

“இதுபோன்ற நிகழ்ச்சிகளில் என்னைப் போன்ற மற்ற தாய்மாருடன் பழகும்போது மனக்கவலையை மறந்து நிம்மதியாகச் சிரிக்க முடிந்தது. பிள்ளைகளுடன் இன்னும் நெருக்கமானேன்,” என்றார் ‌‌‌திருவாட்டி ஷாமளா.

‌‌‌அவரின் எட்டு வயது மகள் கீர்த்தனா யாக்சினி, “நிறைய விலங்குகளைப் பார்த்து மற்ற குழந்தைகளுடன் விளையாடினேன். மீண்டும் இங்குவர ஆவலாக இருக்கிறேன்,” என்றார்.

மூன்று பிள்ளைகளைப் பராமரிக்கும் 34 வயது நாகேஸ்வரி ராஜாவும், திருவாட்டி ‌‌‌ஷாமாளவின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

பாலர் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் திருவாட்டி நாகேஸ்வரி, வார நாள்களில் கூடுதலான நேரத்தை வேலையில் செலவிடுவதால் பிள்ளைகளுடன் பேசிப் பழகப் போதுமான நேரம் கிடைப்பதில்லை என்றார்.

வார இறுதி நாள்களில் கிடைக்கும் நேரம் குறைவு என்பதையும் வீட்டு வேலைகளில் வழக்கமாக மூழ்கிவிடுவதாகவும் அவர் கூறினார். 

கிடைக்கும் நேரத்தில் குடும்பமாக அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போன்ற நடவடிக்கைகளைத் தவிர அடிக்கடி வெளியில் போவது சிரமம் என்ற நாகேஸ்வரிக்கு புரோஜெக்ட் அதீனாவின் இவ்வாண்டு அன்னையர் தினக் கொண்டாட்டம் ஆறுதலாக இருந்தது.

“இங்கே என்னைப் போன்ற பல துணிவான தாய்மாரைப் பார்த்தபோது எனக்குள் புதிய தன்னம்பிக்கை பிறந்தது,” என்று நாகேஸ்வரி புன்னகையுடன் கூறினார்.

வறுமை, மனச்சோர்வு போன்ற சவால்களில் சிக்கியிருக்கும் இந்திய ஒற்றைத் தாய்மாரைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறது ‘புரோஜெக்ட் அதீனா’ திட்டம். பயிற்சி பெற்ற சமூகப் சேவையாளர்கள் அதனை வழிநடத்துகின்றனர்.

தனிநபர் அல்லது குழு ஆலோசனைச் சேவைகள், குடும்பப் பிணைப்பை வலுவப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்றவை திட்டத்தில் அடங்கியுள்ளன.

தாய்மாரின் மனவுறுதியையும் குடும்ப நிலைத்தன்மையையும் மேம்படுத்தி வாழ்க்கையைத் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ‘புரோஜெக்ட் அதீனா’ ஒற்றைத் தாய்மாருக்கு உதவியாய் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்