வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டாரமான லிட்டில் இந்தியாவில் செயல்படும் மரபுசார் வணிகங்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் திட்டம் ஒன்று அறிமுகம் காணவுள்ளது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) பேசிய மூத்த துணையமைச்சர் லோ யென் லிங், “நமது வரலாற்றுப் பகுதிகளின் தனித்துவத்தை மேம்படுத்துவதில் மரபுசார் வணிகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன,” என்றார்.
அவற்றின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தை அவர் அறிவித்தார்.
தேசிய மரபுடைமைக் கழகம் அறிமுகப்படுத்தவுள்ள இந்த ‘லிட்டில் இந்தியா குடிமக்கள் ஈடுபாட்டுத் திட்டத்தின்கீழ்’ மொத்தம் 50 மரபுசார் வர்த்தகங்களின் தொடக்கம், செயல்பாடுகள், பாரம்பரியமான நுட்பங்களின் பரிமாற்றம் ஆகியவை ஆவணப்படுத்தப்படும்.
கழகம் இதற்காக 60 குடிமக்கள் தொண்டூழியர்களைத் தேர்ந்தெடுக்கும்.
மேலும், லிட்டில் இந்தியாவின் கலாசார முக்கியத்துவத்தைக் கட்டிக்காக்கும் அவ்வணிகங்களின் சமூக உறவுகளும் இதில் வெளிப்படும்.
இந்த வணிகங்கள் தங்களின் சவால்களை எவ்வாறு சமாளித்து, அவை எவ்வாறு பரிணமித்தன என்பது பற்றியும் மாறிவரும் காலத்துக்கேற்ப அவை தங்களை எவ்வாறு தகவமைத்துக்கொண்டுள்ளன என்பது குறித்தும் பேசப்படும்.
லிட்டில் இந்தியா வணிகங்களுடன் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடவும் அவற்றின் வணிகம் சார்ந்த ஆழமான புரிதலைப் பெறவும் தொண்டூழியர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
தேர்ந்தெடுக்கப்படுவோர்க்கு, வணிகங்களை நேர்காணல் செய்வதற்கான பயிற்சி 2026 பிற்பகுதியில் வழங்கப்படும். நேர்காணல்களில் பெறப்படும் தகவல்கள், ஆவணங்களில் பயன்படுத்தப்படும். இந்த ஆவணங்கள் 2027ல் வெளியீடு காணும்.
இதன் தொடர்பில் 2026 நடுப்பகுதியில் வணிகங்களைத் தொடர்புகொள்வதுடன், தொண்டூயர்களுக்கும் கழகம் அழைப்பு விடுக்கும்.
கம்போங் கிளாம் வட்டாரத்திலுள்ள மரபுசார் வணிகங்கள் குறித்த தகவல்கள் 2022லும் சைனாடவுன் வணிகங்களின் வரலாறு கடந்த 2025லும் ஆவணப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரலாற்று விழிப்புணர்வை மேம்படுத்த ஆதரவு
சிங்கப்பூரர்களிடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சமூக அமைப்புகளுக்கும் வட்டார வணிகங்களுக்கும் ஆதரவளிக்கும் புதிய நகர்வளத் திட்டப்பணி அலுவலகம் அறிமுகம் காணவுள்ளது.
மரபுசார் வணிகங்களுக்கான அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழுவின்கீழ் செயல்படவுள்ள இந்த அலுவலகம், சிங்கப்பூரர்களிடையே வரலாற்றுப் பகுதிகளைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துவதுடன், கூடுதலானோர் இப்பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட ஊக்குவிக்கும்.
“லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் உள்ளிட்ட முக்கிய வணிகம் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து செயல்படவுள்ள இந்த அலுவலகம், அவற்றின் தேவைகளை அறிவதுடன், வரலாற்றுப் பகுதிகளைத் துடிப்புமிக்க இடங்களாக மாற்ற ஆதரவளிக்கும்,” என்றார் திருவாட்டி லோ.
அவ்வணிகங்களின் தாக்கத்தையும் நிலைத்தன்மையையும் நீட்டிக்கும் திட்டங்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

