ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்பட்ட ஆண் கொசுக்களை விடுவித்து ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும் ‘வொல்பாக்கியா’ திட்டம் (Project Wolbachia), மேலும் ஐந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
டெங்கி அபாயம் அதிகம் இருந்த புக்கிட் பாத்தோக், தெம்பனிஸ் வட்டாரங்களில் முதன்முதலில் 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘வொல்பாக்கியா’ திட்டத்தின் மூலம் 480,000 குடும்பங்கள் பலனடைந்தன.
அதையடுத்து, மேலும் 100,000 குடும்பங்கள் பயனடைய விரிவுபடுத்தப்பட்ட இத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே ஹவ்காங் வட்டாரத்தின் தளம் ஒன்றில் ‘வொல்பாக்கியா’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 21ஆம் தேதி முதல் அந்த வட்டாரத்தின் மேலும் சில பகுதிகள் சேர்க்கப்படும். அத்துடன் சிராங்கூன் கார்டன், சிராங்கூன் நார்த், ஜூரோங் ஈஸ்ட், ஜூரோங் வெஸ்ட் ஆகிய வட்டாரங்களில் வரும் மாதங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
கொசுக்களை விடுவிக்கும் நிகழ்வு அக்டோபர் 3ஆம் தேதி ஹவ்காங் வட்டாரத்தில் நடந்தபோது அதில் கலந்துகொண்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, திட்டத்தின் விரிவாக்கம் குறித்து அறிவித்தார்.
கடந்தகால டெங்கி அபாயம், ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை ஆகியவை தொடர்பான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ‘வொல்பாக்கியா’ திட்டத்துக்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் முன்னதாகக் கூறியிருந்தது.
இந்தத் திட்டத்தின்கீழ் ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்ட ஆண் கொசுக்கள் ‘வொல்பாக்கியா’ கிருமியைத் தாங்கியபடி குடியிருப்புப் பகுதிகளில் விடுவிக்கப்படும். அவை பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்தாலும் அதன் விளைவாக இடப்படும் முட்டைகளால் குஞ்சு பொரிக்க இயலாது.
தேசிய சுற்றுப்புற வாரியம் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடத்திவரும் ஆய்வில் ‘வொல்பாக்கியா’ கொசுக்கள் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் குடியிருப்பாளர்கள், டெங்கி பாதிப்புக்கு ஆளாகும் சாத்தியம் 75% குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
டெங்கிச் சம்பவங்கள் அனைத்துலக அளவில் 2024ஆம் ஆண்டு அதிகரித்து வருகின்றன. ஐரோப்பிய நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 12 மில்லியன் டெங்கி பாதிப்புச் சம்பவங்களும் 8,000 டெங்கி தொடர்பான உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அறியப்படுகிறது.