சிங்கப்பூர் உள்பட ஆசியானின் தெற்கு வட்டாரத்தில் ஜூன் முதல் அக்டோபர் வரை நீண்ட காலம் நீடிக்கும் கடுமையான வெப்பத்தையும் வறண்ட வானிலையையும் எதிர்பார்க்கலாம் என்று ஆசியான் சிறப்பு வானிலை நிலையம் (ஏஎஸ்எம்சி) கூறியுள்ளது.
சிங்கப்பூருடன் மலேசியா, இந்தோனீசியா, புரூணை, தெற்கு தாய்லாந்து ஆகியவை தெற்கு ஆசியான் வட்டாரப் பகுதியில் உள்ள நாடுகள்.
எல்லைதாண்டிய புகைமூட்டமும் தீச்சம்பவங்களும் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் அது தெரிவித்தது.
வரவிருக்கும் மாதங்களில் 'எல் நினோ' பருவநிலை உருவாக அதிக வாய்ப்புள்ள நிலையில், வறண்ட வானிலை அண்மைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் கடுமையானதாகவும் நீடித்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிலையம் கூறியது.
இது அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்று சிங்கப்பூரை தளமாகக்கொண்ட ஆசியான் சிறப்பு வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புகைமூட்டத்தையும் காட்டுத் தீ போன்ற தீச்சம்பவங்களையும் மதிப்பிட்டுக் கண்காணிக்கும் ஆசியானின் வட்டார நிலையமான ஏஎஸ்எம்சி எல்லைதாண்டிய புகைமூட்டம் குறித்த முன்னெச்சரிக்கை சேவைகளை வழங்குகிறது.
தென்கிழக்காசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் மேலும் வெப்பமான, வறண்ட வானிலையைக் கொண்டுவரும் 'எல் நினோ' பருவநிலை இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.