1,301 தற்காப்பு, ஆயுதப்படை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

1,301 தற்காப்பு, ஆயுதப்படை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

2 mins read
b48a6cf4-e2c4-4ea1-b07e-2739815cf5a0
மாஸ்டர் வாரண்ட் அதிகாரி நிலையிலிருந்து மூத்த வாரண்ட் அதிகாரியாகப் பதவி உயர்வுபெற்ற அ. பாண்டிகுமரன். - படம்: தற்காப்பு அமைச்சு

தற்காப்பு அமைச்சின் தலைமையகம், ராணுவம், கடற்படை, விமானப்படை, மின்னிலக்க, உளவுத்துறைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 1,301 அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவ்வாண்டிற்கான தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படையின் பதவி உயர்வு விழா (MSPC) ஜூன் 24, 25 ஆம் தேதிகளில் சிஎம்பிபி ஹில்வியூ லிங்கில் நடைபெற்றது.

சிறப்பாகப் பணியாற்றி, தங்களின் திறமையையும் எதிர்காலத் தலைமைத்துவத் திறனையும் நிரூபித்த பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையில் அந்த விழா ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுகிறது. அப்பதவி உயர்வுகள், ஆயுதப்படை தினத்தை (SAF Day) முன்னிட்டு ஜூலை 1 முதல் அதிகாரபூர்வமாக அமலுக்கு வரும்.

விழாவின் இரண்டாவது நாளில் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டு தகுதியான பணியாளர்களுக்குப் பதவி உயர்வுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.

இவ்வாண்டு பதவி உயர்வு பெற்றவர்களில் 'சாஃப்வோஸ்’ (SAFWOS) தலைமைத்துவப் பள்ளியின் விமானப்படை வழிகாட்டு அதிகாரியான அ.பாண்டிகுமரனும் ஒருவர். 1998ஆம் ஆண்டில் விமானப்படையில் சேர்ந்து இன்று ஆயுதப்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் அவர், மாஸ்டர் வாரண்ட் அதிகாரி பதவியிலிருந்து மூத்த வாரண்ட் அதிகாரி பதவிக்கு உயர்த்தப்பட்டார். 

“மனிதநேய உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள்முதல், மற்றவர்களுக்கு தலைமைத்துவப் பண்புகளைப் போதிப்பதுவரை, ஆயுதப்படையில் எனது பயணம் பல்வேறு அனுபவங்களால் நிறைந்துள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார். “நான் பயிற்சியளிக்கும் ராணுவ வீரர்கள் சிங்கப்பூரின் தற்காப்பிற்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும் வகையில், அவர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு ஊக்கமளிப்பதே எனது பணியாக இருந்தது. அவர்களின் வளர்ச்சியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது எனக்கு மிகுந்த மனநிறைவு அளிக்கிறது,” என்றும் அவர் சொன்னார்.

ஆயுதப்படையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் வீரர்கள் மற்றும் பணியாளர்களின் சேவையை அங்கீகரித்துப் பாராட்டுவதோடு, தங்களையும் நாட்டையும் முன்னேற்றும் நோக்கில் மேலும் சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக பதவி உயர்வு விழா அமைந்தது. 

குறிப்புச் சொற்கள்